சென்னை கடற்கரையோர பகுதியில் வாழ்ந்து வருகிறார் சூர்யா சேதுபதி. அதே பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்கிறார். 17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் ஜெயிலில் அடைக்கிறார்கள். அங்கு சம்பத்தின் மனைவி வரலட்சுமி சரத்குமார், தன் ஆதரவாளர்களை வைத்து சூர்யா சேதுபதியை கொல்ல முயற்சி செய்கிறார். இதிலிருந்து சூர்யா சேதுபதி தப்பித்து விடுகிறார். தொடர்ந்து அவரை கொல்ல முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது.இறுதியில் சூர்யா சேதுபதி கொலை முயற்சியில் இருந்து தப்பித்தாரா? எம்.எல்.ஏ. சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சூர்யா சேதுபதி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். முதல் பாதியில் வசனம் இல்லாமல் உடல் மொழியாலும், கண் பார்வையாலும் நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் பக்குவமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். எம்.எல்.ஏ, சம்பத், அவரது மனைவி வரலட்சுமி சரத்குமார் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள். தாய் பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார் தேவதர்ஷினி. மகனுக்காக ஏங்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். அபி நட்சத்திராவின் நடிப்பு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடியாளாக வரும் ரிஷி கவனிக்க வைத்து இருக்கிறார்.
பழிக்கு பழி வாங்கும் கதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனல் அரசு. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் அனைத்திலும் மாஸ் காண்பித்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சி பிரமிக்க வைத்து இருக்கிறார்.
சாம்.சி.எஸ் இசையில் இந்தா வாங்கிக்கோ பாடல் டான்ஸ் ஆட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
AK Braveman Picturess நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.”,
