தன்னைப் பற்றி தவறான செய்திகள் வெளிவருவதாகக் கூறி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.300 கோடி பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ஆகஸ்ட் 7 ஆம் தேதி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.
இந்நிலையில், தன் மீது உண்மைக்கு மாறான செய்திகள் வெளிவருவதாகக் கூறி ஞானவேல் ராஜா இப்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் தயாரித்த மகாமுனி படம் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. நீதிமணி என்பவர் இதன் தமிழ்நாடு ஏரியா வினியோக உரிமையை என்னிடம் கேட்டார்.
2019 ஆம் ஆண்டு மே மாதம் ரூ. 6 கோடியே, 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் போட்டோம். அவர் பகுதி தொகையாக ரூ 2 கோடியே முப்பது லட்சம் கொடுத்தார்.
மீதி தொகையை பிறகு தருவதாகச் சொன்னவர், தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். இதற்காக சினிமா சட்டதிட்டபடி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமணியும் அவர் கூட்டாளிகளும் ரூ. 3 கோடி மோசடி செய்துவிட்டதாக, துளசி மணிகண்டன் என்பவர் புகார் அளித்துள்ளார். என் மீதோ, ஸ்டூடியோ கிரீன் மீதோ எந்த புகாரும் இல்லை.
இதற்கிடையே நீதிமணி மீது துளசி மணிகண்டன் அளித்துள்ள புகாரில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் என்னையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தையும் இணைத்துள்ளனர்.
நான் நிதி மோசடி செய்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உண்மைக்கு புறம்பான செய்திகள் மீடியாவில் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எனவே உண்மைக்குப் புறம்பான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம், கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன், சூர்யாவின் சிங்கம், கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, மெட்ராஸ், கொம்பன், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உட்பட பல தயாரித்துள்ளது.