திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டிருப்பவர் ஸ்ரீதரன் மரியதாஸன். Krikes Cine Creations என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு ஆங்கில படங்களை தமிழகத்தில் விநியோகம் செய்தார். அதுமட்டுமல்லாமல் மிஸ்கின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகிய சவரக்கத்தி என்ற படத்தையும் இவர்தான் வெளியிட்டார். மேலும் விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான இரும்புத்திரை படத்தினை லைகா நிறுவனத்தோடு சேர்ந்து வெளியிட்டார்.
இப்படி தமிழ் சினிமாவில் பல வெற்றிகளை கண்டுள்ள ஸ்ரீதரன் மரியதாஸன் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில். இந்த படத்தின் டீசர், பாடல்கள், போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தான் இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்.
ஜெயில் படம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல்வேறு படங்களை தயாரிக்க திட்டமிட்டு வருகிறார் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் மரியதாஸன். இது குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.