மஸ்தான் இயக்கத்தில் அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா ஆகியோர் நடித்துள்ள படம் ‘வெட்டி பசங்க’. இந்தப் படத்தை பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கவிஞர் சினேகன், ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், சக்கரவர்த்தி, வாராகி, கே.ராஜன் இசையமைப்பாளர் அம்ரீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் பேசியதாவது: “கொரோனா காலத்தில் தயாரிப்பு செலவுகளையும், நடிகர், நடிகைகள் சம்பளத்தையும் குறைக்க வேண்டும். சில நடிகர், நடிகைகள் அதிக செலவு வைக்கிறார்கள். நடிகை நயன்தாரா தனக்கு மும்பையில் இருந்து சிகை அலங்கார நிபுணரையும், ஆடை வடிவமைப்பாளரையும் வர வைக்கிறார்.
அவர்களுக்கு சம்பளம், விமான செலவு, ஓட்டலில் தங்கும் செலவுகளை தயாரிப்பாளர் கவனிக்க வேண்டி உள்ளது. அவரது மேக்கப் மேன் உதவியாளர்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு தயாரிப்பாளர் ஒரு நாளைக்கு ரூ.1½ லட்சம் செலவிட வேண்டி உள்ளது. அவர் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் உதவியாளர்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் செலவாகிறது.
தமிழ் நாட்டை சேர்ந்த நடிகை ஆண்ட்ரியாவும் மும்பை ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார நிபுணர் வேண்டும் என்கிறார். நடிகர்களும் தங்களுக்கான பாடிகார்டுகளுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.
இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். இப்படிப்பட்ட செலவுகள் குறைக்கப்பட்டால்தான் சினிமா வாழும். வெட்டி பசங்க படம் வெற்றி பெறும.” இவ்வாறு அவர் கூறினார்.