விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 108 பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகள் மற்றும் அரிசிமூட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் PT செல்வகுமார் உதவி.
கொரோனா வைரஸ் தொடங்கிய நாட்களில் இருந்தே கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.
இன்று இளைய தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்டம் மைலாடி , தோவாளை , நெல்லை மாவட்டம் வள்ளியூர் , பூச்சிக்காடு ஆகிய இடங்களில் ஏழை எளிய பெண்களுக்கும் , மாற்றுத்திறனாளிகளுக்கும் 108 பேருக்கும் ஆட்டுக்குட்டிகள் மற்றும் 108 பெண்களுக்கு அரிசிமூட்டைகளை கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவரும் இயக்குனருமான PT செல்வகுமார் வழங்கினார்.
பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் பேசியதாவது :
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொடங்கியது முதல் இன்றோடு அறுபது நாட்கள் தொடர்ச்சியாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்.
இன்று இளையதளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் வறுமையில் தவித்து வரும் 108 பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகளும் மற்றும் 108 பெண்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கினோம்.
இந்த ஏழை எளிய மக்கள் மூச்சு திணறும் அளவுக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள், தொழிலதிபர்கள், மற்றும் வசதி படைத்தவர்கள் இவர்களுக்கு உதவ வேண்டும் இதுவே இறைவனுக்கு செய்யும் தொண்டு ஆகும். இளைய தளபதி விஜய் அவர்கள் ஜாதி மத பேதமின்றிஅனைவருடனும் அன்பாக பழகக்கூடியவர்.
இந்தியா முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞன், அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு எந்த நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொண்டதால் இந்த ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தோம் என்று கூறினார்.
மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். .இந்த நிகழ்வில் காணிமடம் சிவா, குமரி மற்றும் நெல்லை கலப்பை பொறுப்பாளர் கார்த்திக் ராஜா , வேல்ஸ் பாக்கியராஜ் , ஜெயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்