Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

ராயன் திரை விமர்சனம்

கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார்.சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை வளர்த்து வருகிறார் தனுஷ்.

சென்னையில் சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என இரண்டு தாதாக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதன்படி மோதல் நடக்கிறது. இதில் எதிர்பாராதவிதமாக தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் மாட்டிக் கொள்கிறார்.

இந்த மோதலில் சரவணனின் மகன் கொலை செய்யப்பட, சரவணன் கோவத்தில் சந்தீப்பை வீட்டுக்கு அனுப்ப சொல்கிறார். ஆனால், தனுஷ் தன் தம்பிகளோடு சரவணன் வீட்டுக்கு சென்று கொலை செய்கிறார்.

சரவணனை கொலை செய்தது யார் என்று ஒரு பக்கம் போலீசும், ஒரு பக்கம் எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்களும் தேடுகிறார்கள். இறுதியில் தனுஷின் வாழ்க்கை என்ன ஆனது? தம்பிகள், தங்கையை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், ராயன் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். தம்பிகள் மற்றும் தங்கை மீது பாசம் காட்டுவது, தம்பிக்கு ஆபத்து என்றவுடன் வெகுண்டு எழுவது என்று நடிப்பில் பளிச்சிடுகிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு சபாஷ் போட வைத்து இருக்கிறது.

நடிப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார் துஷாரா விஜயன். அன்ணனுக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நடிப்பு அரசி என்றே சொல்லலாம். துறுதுறு இளைஜனாக நடித்து மனதில் பதிந்து இருக்கிறார் சந்தீப் கிஷன். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் காளிதாஸ் ஜெயராம்.

வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். செல்வராகவனின் நடிப்பு பிரமிப்பு. சரவணன், வரலட்சுமி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

நடிப்பில் அசுரன் என்று ஏற்கனவே நிரூபித்த தனுஷ், தற்போது இயக்கத்தில் அசுரன் என்று நிரூபித்து இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் போட்டி போட்டு நடிக்க வைத்து இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் என சபாஷ் போட வைத்திருக்கிறார் தனுஷ்.

படத்திற்கு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமான் இசை. பின்னணியில் மிரட்டி இருக்கிறார். பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

Raayan Movie Review
Raayan Movie Review