இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் குறித்து போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக செம்பூர் போலீசார் கடந்த 12-ந் தேதி ரன்வீர் சிங் வீட்டுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்தனர். அந்த நோட்டீசில் 22-ந் தேதி (இன்று) நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண படம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கூறப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணைக்கு ஆஜராக ரன்வீர் சிங் கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.