தமிழ் தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்ற படம் ஜெய்பீம். இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜிமோல் ஜோஸ், ராவ் ரமேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். ஜெய்பீம் படத்தின் வெற்றியை சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் இப்படத்தை குறித்து பேசவைத்தது.
சமீபத்தில் இப்படத்தில் நடித்த நடிகர் ராவ் ரமேஷ் அவர் ஏற்று நடித்த அட்டர்னி ஜெனரல் கதாப்பாத்திரத்தை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
இந்த கதாப்பாத்திரம் பேசப்படுவதற்க்கு முழுக்க காரணம் இயக்குனர் ஞானவேல் சார் தான். அவர்தான் என் கேரக்டரை அணு அணுவாக என்னுள் ஏற்றினார். எவ்வளவு சிரிக்க வேண்டும், எவ்வளவு கோபம் வேண்டும் என்றெல்லாம் அந்த ஸ்கேல் மாறாமல் என்னிடம் நடிப்பை வாங்கினார்.
ஏனென்றால் அந்தக் கேரக்டர் சூர்யாவுக்கு எதிரானவரே தவிர வில்லன் இல்லை. உண்மையில் பொறுப்புள்ள அதிகாரி அவர் பொறுப்பை நிறைவாக செய்ய வேண்டும். அவரை நம்பிதான் ஒட்டுமொத்தக் காவல்துறையின் கௌரவம் காக்கப்பட இருக்கிறது, அது மட்டுமல்லாமல் அரசுக்கும் களங்கம் வராமல் அந்த வழக்கை வழி நடத்த வேண்டும். அந்தப் பொறுப்பு அவர் பேசுவதில் இருந்தே வெளிப்பட வேண்டும் அவர் நடத்தையில் தெரிய வேண்டும்.
படத்தில் ஒரு காட்சியில் “நான்தான் இன்னைக்கு ஆஜர் ஆகறேன்னு ஜட்ஜ்கிட்ட சொன்னிங்களா..?” என்று கேட்டு நான் கோர்ட்க்குள் வர அத்தனை வழக்கறிஞர்களும் எழுந்து வணக்கம் சொல்வதும், ஜட்ஜே நலம் விசாரிப்பதுமான காட்சி அந்தப் பாத்திரத்தின் மேன்மையை அப்படியே சொன்னது. படம் பார்த்த அனைவருமே அந்த நடிப்பில் என்னைப் பாராட்டினார்கள்.
அப்படி ஒரு காட்சியை அமைத்த இயக்குனருக்குதான் அத்தனைப் பாராட்டுகளும் போய் சேர வேண்டும். அதனால்தான் அந்தக் கேரக்டரில் நடிக்கும்போது அந்த பாடி லாங்குவேஜ் தானாகவே எனக்கு வந்தது..! என்று அவர் பகிர்ந்துள்ளார்.