கேரளாவை சேர்ந்த நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். விஜய்பாபு, தன்னை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் விஜய்பாபு, அந்த நடிகையை பற்றி சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய்பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். போலீசார் தேடுவதை அறிந்ததும் விஜய்பாபு, வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அதன்பின்பு அவர் நாடு திரும்பவில்லை. 39 நாட்களுக்கு பிறகு இன்று அவர் திரும்பினார் . கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தலைமறைவான விஜய்பாபு அதன்பின்பு கேரளா திரும்பவில்லை. அங்கிருந்தபடியே அவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவர் கேரளா திரும்பி விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகும்படி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும், அதுவரை விஜய்பாபுவை கைது செய்ய கூடாது எனவும் கூறியது.
இதையடுத்து நடிகர் விஜய்பாபு வெளிநாட்டில் இருந்து 39 நாட்களுக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார். நாளை அவர் போலீஸ் அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார். இது பற்றி அவர் கொச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்து உள்ளனர். வழக்கு விசாரணையின் போது நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றார்.