Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரூ.26 கோடி மோசடி- சினிமா இசையமைப்பாளர் அம்ரிஸ் கைது

Rs 26 crore scam Film composer Amrish arrested

பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஸ் (வயது 33). இவர் பிரபல சினிமா இசையமைப்பாளர். நடிகர் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா, அரவிந்தசாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், பிரபுதேவா நடித்த சார்லிசாப்ளின்-2 உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். நானே என்னுள் இல்லை என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இவர் சென்னை போயஸ் கார்டனில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை, இவர் சென்னை தியாகராயநகர் கிருஷ்ணா தெருவில் உள்ள ஒரு வீட்டில் சினிமா இசை அமைப்பு பணியில் இருந்த போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்றனர். அவரை விசாரணைக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர். அவரை எதற்காக விசாரணைக்கு அழைத்து வந்தனர் என்பது மர்மமாக இருந்தது.

நடிகை ஜெயசித்ரா நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, தனது மகனை சீருடை அணியாமல் வந்த சிலர் போலீஸ் என்று கூறி அழைத்து சென்று விட்டனர் என்றும், தற்போது அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றும் புகார் கூறினார்.

அப்போதுதான் மோசடி வழக்கில், உங்கள் மகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என்று நடிகை ஜெயசித்ராவிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயசித்ரா மகனை காப்பாற்ற பல்வேறு முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அதில் பலன் கிடைக்காமல் போகவே நேற்று இரவு ஜெயசித்ரா மிகவும் வருத்தமுடன் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அம்ரிஸ் மீது ரூ.26 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு செய்திக்குறிப்பு வெளியிட்டனர்.

சென்னை வளசரவாக்கம், ஜானகி நகரைச் சேர்ந்த நெடுமாறன் (68) என்பவரிடம், அரிய வகை இரிடியம் என்ற பொருளை தருவதாகவும், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் அது விலை போகும் என்று கூறி அம்ரிசும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.26 கோடி வாங்கிக்கொண்டு, போலியான இரிடியம் பொருளை கொடுத்து மோசடி செய்து விட்டதாகவும் புகார் எழுந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு அம்ரிஸ் இந்த மோசடியில் ஈடுபட்டதாக நெடுமாறன் கொடுத்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கில் அம்ரிஸ் தலைமறைவாக இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.