மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான காளி வெங்கட் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க, நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.