வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன் லாலும், இந்தியில் சல்மான் கானும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியில் இதுவரை 14 சீசன் முடிவடைந்துள்ளது. தற்போது 15-வது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15-வது சீசனை தொகுத்து வழங்க உள்ள நடிகர் சல்மான் கானுக்கு ரூ.350 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாக ஒரு வாரத்துக்கு ரூ.13 கோடி சம்பளம் வாங்கி வந்த சல்மான் கான், தற்போது அதனை ரூ.25 கோடியாக உயர்த்தி உள்ளாராம். இதன்மூலம் அவர் தொகுத்து வழங்க உள்ள 14 வாரத்துக்கு ரூ.350 கோடி சம்பளம் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பிக்பாஸ் 15’ நிகழ்ச்சிக்காக நடிகர் சல்மான் கான் வாங்கும் சம்பளம் ‘பாகுபலி 2’ பட பட்ஜெட்டை (ரூ.250 கோடி) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.