“பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை நடிகர் ரன்பீர் கபூர் மறுத்ததாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, \”நான் ஆடியோ டீசரில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற டேக்கை இணைத்திருந்தேன் இதை பார்த்த ரன்பீர் அந்த டேக்கை எடுக்கும் படி கூறினார். ஆனால், நான் இது என்னுடைய உணர்வு என்று ரன்பீரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் ஒன்றாக வேலை பார்த்த மூன்று வருடங்களில் ரன்பீர் இதை மட்டும் தான் மறுத்துள்ளார். நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் நான் செய்வேன் என்று அந்த டேக்கை இணைத்தேன்\” என கூறினார்.மேலும், \”நான் ரன்பீர் கபூரின் பல படங்களை ஹைதராபாத்தில் பார்த்திருக்கிறேன். அவரை கொண்டாடும் ரசிகர்களை பார்த்திருக்கிறேன். ஒரு நட்சத்திரத்திற்கு மட்டுமே அந்த வரவேற்பு கிடைக்கும். ரன்பீருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ டேக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். யாரும் என்னிடம் ஏன் அந்த டேக்கை கொடுத்தோம் என்று கேட்கவில்லை\” என்று கூறினார்.”,