Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

சங்கத்தலைவன் திரைவிமர்சனம்

Sangathalaivan Movie Review

மாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து வரும் ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு கை துண்டாகிறது. இந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் ஏமாற்ற நினைக்கிறார் மாரிமுத்து.

இந்நிலையில் ஊரில் நெசவுத் தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்து போராடும் சமுத்திரக்கனியிடம் இந்த பிரச்சனையை மறைமுகமாக எடுத்து செல்கிறார் கருணாஸ். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈடை சமுத்திரக்கனி, முறையாக பெற்றுக் கொடுக்கிறார்.

ஒருகட்டத்தில், சமுத்திரக்கனியிடம் பிரச்சனையை கொண்டு சென்றது கருணாஸ் தான் என மாரிமுத்துவிற்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் மாரிமுத்து, கருணாசை கொல்ல நினைக்கிறார். இதிலிருந்து கருணாஸ் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காமெடி கதாபாத்திரங்களில் அதிகமாக பார்க்கப்பட்ட கருணாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். காமெடி, காதல், துணிச்சல் என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சங்கத்தலைவனாக வரும் சமுத்திரக்கனி, ஏன் போராட வேண்டும், யாருக்காக போராட வேண்டும் என்று பேசி கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்.

சமுத்திரகனியின் மனைவியாக வரும் ரம்யா, பேச்சு மற்றும் உடல் மொழியில் கிராமத்து பெண்ணாக மாறி இருக்கிறார். குறிப்பாக கருநாசை ஊக்கப்படுத்த இவர் பேசும்போது நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். கருணாஸை காதலிப்பவராக வரும் சுனு லட்சுமி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மாரிமுத்துவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

தறியுடன் என்ற நாவலை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிமாறன். முதலாளித்துவம், தொழிலாளர்கள், போராட்டம் என திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு. படத்தின் வசனங்கள் பிளஸ்.

ராபர்ட் சற்குணத்தின் இசையில் பாடல்கள் படத்தோடு ஒன்றியிருக்கிறது. பின்னனி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘சங்கத் தலைவன்’ சிறந்தவன்.