நிலன் (வினோத் லோகிதாஸ்), சத்யா (சத்யா என்.ஜே), ஷங்கர் (ஷிவ் நிஷாந்த்), விமல் (விமல்ராஜ்) ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். இதில், கதாநாயகன் வினோத் லோகிதாஸ் ஸ்னூக்கர் விளையாட்டில் மிகவும் திறைமைசாலி. இவர் விளையாட்டு ஒன்றில் பங்கேற்று இறுதி கட்டம் வரை சென்று அதில் வெற்றி பெற்றுவிடுகிறார். இதனை கொண்டாடும் விதமாக நண்பர்களுடன் வினோத் லோகிதாஸ் ஏற்காடு செல்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை. படத்தில் அனைவரும் புது முகங்களாக இருந்தாலும் தனக்கான வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதாநாயகன் வினோத் லோகிதாஸ் விளையாடுவது, காதலிப்பது என துருதுருப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஷிவ் நிஷாந்த், சத்யா என்.ஜே, யாசீன் ஆகியோர் காமெடியின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். கதாநாயகி திவ்யா துரைசாமி காதல் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.
இயக்குனர் மணிசேகர் முதல் படத்திலேயே ஸ்கோர் செய்துள்ளார். இடைவேளை வரை காதல், மோதல் என இளம் தலைமுறையினர் ரசிக்கும் படியாக படத்தை கொண்டு சென்று பின்னர் குடியால் ஏற்படும் பாதிப்புகளை அழுத்தமாக கூறியதன் மூலம் யோசிக்க வைத்துள்ளார். கார்த்திக் ஸ்வர்ணகுமார் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது. தனுஷ் மேனன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். மொத்தத்தில் ‘சஞ்ஜீவன்’ – களமாடுவான்