Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சத்யஜித் ரேயின் ‘பதர் பாஞ்சாலி’ நிறமூட்டப்படுகிறது

முதன் முதலாக இந்தியப் படமொன்றை செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தைப் பாவித்து (Artificial Intelligence) நிறமூட்டும் முயற்சி

இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குனரும், ஒஸ்கார் விருது பெற்றவருமான, மறைந்த சத்யஜித் ரேயின் (Satyajit Ray) முதல் படமான பதர் பாஞ்சாலி (Pather Panchali, 1955) யை நிறமூட்டும் முயற்சிகளை மேறிலாந்து பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் அனிகெட் பேரா மேற்கொண்டுள்ளார்.

“சத்யஜித் ரேயின் 100வது பிறந்த வருடத்தில் அவரது கறுப்பு வெள்ளைத் திரைப்படத்தை நிறமாக்குவது அவருக்கு நான் செய்யும் நன்றிக்கடன்” என ரேயின் ஆத்மார்த்த ரசிகரான பேராசிரியர் பேரா தெரிவித்தார்.

ஆனாலும், அவர் பரீட்சார்த்தமாக நிறமூட்டிய படத்தின் ஒரு பகுதியை அவர் சமூகவலைத் தளத்தில் வெளியிட்டபோது அதற்கு முற்றுமுழுதான ஆதரவு கிடைக்கவில்லை.  குறிப்பாக ரேயின் மகன் சாண்டிப் இது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.  இண்டியன் எக்ஸ்பிரெஸ், வங்காளப் பதிப்புக்கு அவர் கொடுத்த பேட்டியில், “ஒரு செந்தர மதிப்புள்ள (classic) படத்தை இப்படி சேதப்படுத்தத் தேவையில்லை” எனக் கூறினார்.

ஏன் பதர் பாஞ்சாலி?

“பதர் பாஞ்சாலி, இதுவரை வந்த உலகப் புகழ்பெற்ற இந்தியப்படங்களில் எனக்கு மிக விருப்பமான படம்.  அதனால் நான் அதை நிறமூட்ட விரும்பினேன்.  நிறமூட்டுவதற்கு முன் படத்தை முதலில் மீட்டமைத்து (restore) பின்னர் டிஜிட்டல் முறையால் தரமுயர்த்த வேண்டும்.  இதனால் படம் துல்லியமாகும்.  இது ஒரு புதிய தொழில்நுட்பமாக இருந்தாலும், பல ஹொலிவூட் படங்களில் இந் நடைமுறை ஏற்கெனவே பின்பற்றப்படுகிறது.  பதர் பாஞ்சாலி மூலம் நான் இதை இந்தியாவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்” என்கிறார் பேராசிரியர் பேரா.

இந்த முயற்சி பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறதே என்று கேட்டதற்கு, “இம் முயற்சி அப்படியொரு எதிர்ப்பலையை உருவாக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. நான், இதை ஒரு ஆராய்ச்சி முயற்சியாக, செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தைக் கொண்டு செய்யலாம் என்றே நினைத்திருந்தேன்.  ‘பதர் பாஞ்சாலி’யை நான் எப்போதுமே கறுப்பு வெள்ளையாகவே நினைவில் வைத்திருப்பேன்.  அப்படித்தான் ரசிகர்களும் பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.  இந்த எனது சிறு முயற்சி மூலம் செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தைத் திரைப்படத் துறையில் புகுத்தி அதனால் எந்தளவுதூரம் சாதிக்கலாம் என முயல்வதே எனது நோக்கம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தின் மூலம். நிறமூட்டுவது முதல், காணொளியின் தரம் போன்றவற்றை அதிக செலவில்லாமல், குறுகிய நேரத்தில் செய்து முடிக்கலாம் என பேரா கூறுகிறார்.