துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருகிறார்.
இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் ‘பீஸ்ட்’, ‘சாணிக் காயிதம்’, ‘பகாசூரன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து கவர்ந்தார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் ‘தான் அழுது கொண்டே இருந்ததாக’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெரும் என நம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி பேரிடியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்திய அணி வீரர்களும் களத்திலேயே மனமுடைந்து கண்ணீர் சிந்தியபடி வெளியேறினர்.
நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம்.
அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது.
நெஞ்சம் உடைந்து…— selvaraghavan (@selvaraghavan) November 20, 2023