கொடைக்கானலில் உள்ள ஒரு மலைப்பகுதியில் தாய் மற்றும் தந்தையை இழந்த தனது மகளின் குழந்தையுன் வாழ்ந்து வருகிறார் கோவை சரளா. அவளின் கனவுகளுக்காகவும் ஆசைக்காகவும் சின்ன சின்ன வேலைகளை செய்து சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். மலைப்பகுதியில் கிடைக்கும் சிறு சிறு இயற்கை பொருட்களை சேகரித்து அதில் வரும் வருமானத்தை வைத்து அந்த சிறிய குடும்பத்தை நடத்தி வருகிறார். இதனிடையே தனது பேத்தியை சிலர் கற்பழித்து விடுகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் கோவை சரளா அவர்களை பழிவாங்க நினைக்கிறார்.
அச்சமயம் வழக்கறிஞர் அஷ்வினுடைய உதவி கிடைக்க, இதில் சிக்கிக் கொண்டுள்ள இவர்களுக்கு நியாயம் கிடைக்க அஷ்வினும் உடனிருக்கிறார். பணபலம் இல்லாத இவர்கள் அதிகார வர்கத்தில் இருப்பவர்களை எதிர்த்து வெற்றி பெற முடிந்ததா? இல்லையா? இந்த கொடுமையை செய்தவர்கள் யார்? அவர்களை கண்டு பிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. பழம்பெரும் நகைச்சுவை நடிகையான கோவை சரளா, குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார். தாய் தந்தை இல்லாத குழந்தையை தனது உழைப்பின் மூலம் வாழ வைக்க முயற்சிப்பதிலும், அவளின் கனவை நனவாக்க முயற்சிப்பதிலும், பேத்திக்கு நடந்த கொடுமையை எதிர்த்து போராட நினைப்பதிலும் பல வித்தியாசங்களை காட்டி கோவை சரளா கைத்தட்டல் பெறுகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் நிலா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வழக்கறிஞராக வரும் அஷ்வின் அவர் பணியை சரியாக செய்துள்ளார்.
பேருந்து நடத்துனராக வரும் தம்பி ராமையா எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் வரும் பிற கதாப்பாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து முடித்துள்ளனர். மைனா படத்திற்கு பிறகு மீண்டும் பேருந்து பயணத்தை மையமாக வைத்து செம்பி படத்தை திரில்லர் வகையில் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். படத்தின் கதை இதற்கு முன்பு வெளியாகியிருக்கும் படங்களின் கதை சாயல் போன்று இருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசம் காட்டி விறுவிறுப்பை கூட்டியுள்ளார். சில இடங்களில் தொய்வு இருப்பது படத்தை சற்று பாதிக்கிறது.
முதல் பாதி நீளத்தை குறைத்திருக்கலாம். மலைப்பகுதியின் அழகை இயற்கையோடு காட்சிபடுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் புவன். படத்தின் பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா. இருந்தும் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை, கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் செம்பி – பார்க்கலாம்.
