நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் மீ டூவில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஹவுஸ்புல், ஹவுஸ்புல் 2, தர்னா ஸ்ருதி யெ போன்ற இந்தி படங்களை இயக்கியவரும், நடிகருமான சாஜித்கான் மீது பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் 2005-ம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டார். நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால் அவருக்கு இந்தி நடிகர்கள் ஆதரவாக பேசி இருப்பார்கள்.
இந்தி திரையுலக மாபியா வலிமையானது. நான் சாஜித் மீது பழிசுமத்தவில்லை. நடந்த உண்மையை கூறுகிறேன். என் தந்தை இறந்ததும் துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்தார். நான் மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார்” என்று தெரிவித்து உள்ளார்.
இந்த புகார் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சாஜித்கான் மீது நடிகைகள் ராச்சல், டிம்பிள் பாவ்லா, உதவி இயக்குனர் சலோனி சோப்ரா உள்ளிட்ட பலர் பாலியல் புகார் கூறியிருந்தனர்.