பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ என இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படங்களின் வெற்றி மூலம் ஷாருக்கான் ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி வசூலை கொடுத்த நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த நிலையில் சமீபகாலமாக நடிகர் ஷாருக்கானுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக அடிக்கடி மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 6 கமாண்டோக்கள், 4 போலீசார் உள்ளிட்ட 11 பேர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
அவரது பங்களா முன்பு 4 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எம்பி-5 எந்திர துப்பாக்கி. ஏகே- 47 ரக துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருப்பார்கள். இவர்கள் மகராஷ்டிரா மாநில போலீசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள். இதற்கு முன்பு ஷாருக்கானுக்கு 2 போலீசார் மட்டுமே பாதுகாப்பு வழங்கினார்கள்.
கடந்த 5-ந்தேதி மாநில உள்துறை, மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்ட துறைகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் நடிகர் ஷாருக்கானுக்கு சமீபத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு அடுத்த உயர்மட்ட குழு பரிந்துரை மற்றும் மறு ஆய்வுக்குழு முடிவு வரும் வரை அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.”,