தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை அமைத்துக் கொடுத்து பிசியான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தேவி ஸ்ரீ பிரசாத். தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர் ஆன இவர் தமிழிலும் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம் என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரது இசையில் கடைசியாக வெளியான புஷ்பா படம் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை புத்துணர்ச்சியோடு ஆட்டம் போட வைத்தது. அதிலும் குறிப்பாக “ஊ சொல்றியா மாமா” பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரல் ஆனது. இப்பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து மறைவதற்குள் தி வாரியர் என்ற படத்தில் “புல்லட்டு” என்ற பாடல் மூலம் ரசிகர்களை மேலும் ஆட்டம் போட வைத்தார்.
இப்படி தாறுமாறாக பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் 42 வயதான தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடாவை ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
அண்மையில் இது குறித்து நடிகை பூஜிதா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் தானும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் திருமணம் செய்துகொண்டதாக பரவும் தகவலில் துளிகூட உண்மையில்லை என தெரிவித்துள்ள அவர் எங்கிருந்து இந்த ஆதாரமற்ற தகவல் பரவியது என தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார். அதேபோல் தான் அவருடன் டேட்டிங் எதுவும் செல்லவில்லை என்றும் தற்போது வரை சிங்கிளாகவே இருப்பதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.