Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’!

hort Cut bags two awards at Toronto Tamil International Film Festival

மணி & மணி கிரியேஷன் சார்பில் எம் சிவராமன் தயாரித்துள்ள ‘ஷார்ட் கட்’, அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாகும். படத்தை எழுதி இயக்கியுள்ள மணி தாமோதரன் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கே எம் ரயான் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை விஜய் கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஸ்ரீதர் கையாண்டுள்ளனர். படத்தொகுப்புக்கு விது ஜீவா பொறுப்பேற்றுள்ளார்.

“கையில் சுத்தமாக பணமே இல்லாத நான்கு பேர் திடீர் ‘ஞானோதயம்’ பெற்று அடுத்தவர்களை ஏமாற்றி ஒரே நாளில் எவ்வாறு கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை. இந்த கதாபாத்திரங்களை ஸ்ரீதர், பாரி, சந்தோஷ் மற்றும் சுரேந்தர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகை உபாசனா, தஸ்மிகா லஷ்மன், எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன் மற்றும் ‘அறம்’ ராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சர்வதேச புகழ்பெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மணி தாமோதரன் இயக்கியுள்ள ‘ஷார்ட் கட்’ பெற்றுள்ளது.

மேலும், இந்த படத்தில் நான்கு கேரக்டர்களில் ஒரு கேரக்டரை ஏற்று நடித்துள்ள ஸ்ரீதர், டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகருக்கான (அறிமுகம்) விருதை பெற்றுள்ளார்.

படத்தின் இயக்குநர் மணி தாமோதரன் கூறுகையில், “பணத்திற்காக வாக்குகளை விற்பது என்பது பணம் வாங்கிக் கொண்டு கழிப்பிடத்தை வாடகைக்கு விடுவதை போன்றதே. இதன் காரணமாகவே அரசியலும், நாடும் நாற்றமடைகிறது. இது தான் ஷார்ட் கட்டின் மையக்கரு. இதை ஜனரஞ்சகமான முறையில், மக்களுக்கு புரியும் வண்னம், அதே சமயம் அவர்கள் ரசிக்கும் விதத்தில் கூறியிருக்கிறோம்,” என்றார்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ‘ரெட் ஜெமினி’ காமிராவை பயன்படுத்தி படம்பிடித்துள்ளோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீதர், “எனது முதல் படத்திலேயே இந்த கவுரவமிக்க விருது கிடைத்திருப்பது எனக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்த டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று கூறினார்.

இந்த ‘ஷார்ட் கட்’ மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.