பிரபல சினிமா பின்னணி பாடகி சுனிதா. இவர் தமிழில் விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெற்ற காதல் சொல்வது… என்ற பாடலை பாடி பிரபலமானார். காதல் ரோஜாவே உள்ளிட்ட சில படங்களிலும் பாடி இருக்கிறார். இளையராஜா இசையிலும் பாடி உள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் பாடி உள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்தும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். சில நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சுனிதாவுக்கு 19 வயதிலேயே திருமணம் முடிந்தது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரபனேனி என்பவரை தற்போது சுனிதா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத் அருகே உள்ள அம்மாபள்ளி ஶ்ரீ சீதாராம கோவிலில் நடந்தது. ஏராளமான திரைப்பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ராம் வீரபனேனியும் சில வருடங்களுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.