கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இரண்டு சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களால் பேட் வாங்க கூட வசதி இல்லாத நிலையில் உள்ளதால், தென்னை மட்டை, பழைய மரக்கட்டை போன்றவற்றில் பேட் செய்து விளையாடி வருகின்றனர். நல்ல பேட் வாங்க வேண்டும் என்று சிறுவன் சாமுவேலுக்கு ஆசை ஏற்படுகிறது. கிரிக்கெட் பேட் மீது அதீத ஆசை கொள்ளும் சாமுவேல், எப்படியாவது பேட் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறான். இதனால் அவனுடைய நண்பன் ராஜேஷு மீது திருட்டு பழி விழுகிறது.
தவறு செய்யாத ராஜேஷ் மீது திருட்டு பழி விழுவதற்கு காரணமான சாமுவேல், அதனை பொருட்படுத்தாமல் பேட் வாங்க திசை மாறுகிறான். இறுதியில் இந்த சிறுவர்கள் பேட் வாங்கினார்களா? இதனால் இவர்கள் மீது விழும் பழியை எப்படி எதிர்கொள்கின்றனர்? என்பதே படத்தின் மீதிக்கதை. சாமுவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் அஜிதன் தவசிமுத்து, அழகாக நடித்துள்ளார். எந்த தவறும் செய்யாத நண்பன் தண்டிக்கப்படும் இடங்களில் அனுதாபங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அப்பாவி நண்பனாக நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு, வித்யாசமான பார்வை, அப்பாவி முகம், குடும்ப ஏழ்மை என அனைத்தையும் வித்யாசப்படுத்தி காட்டியுள்ளார்.
அறியாத வயதில், சிறுவர்களுக்கு வரும் அனைத்து ஆசைகளையும், அதை அடைவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் இருவரும் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் பிற கதாப்பாத்திரத்தில் வரும் பலரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர். முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான படத்தை இயக்கி சுவாரசியப்படுத்தியுள்ளார் இயக்குனர் சாது ஃபெர்லிங்டன். அலட்டல் திரைக்கதை, பெரிய நடிகர்கள் என எதையும் இணைக்காமல் கதைக்கு தேவையான விஷயங்களை கொடுத்துள்ளார்.
சில இடங்களில் தொய்வு ஏற்படுவது போன்று தோன்றுகிறது. கிராமத்து பின்னணியை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் வி.சிவானந்த் காந்தி. எஸ்.சாம் எட்வின் மனோகர் மற்றும் ஜே.ஸ்டாண்ட்லி ஜான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே. மொத்தத்தில் சிறுவன் சாமுவேல் – புதிய முயற்சி