கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை நேகா மேனன். நாரதன், ஜாக்சன்துரை ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். வாணி ராணி, சித்தி 2, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
19 வயதாகும் நடிகை நேகா, கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதள பக்கத்தில், தன் குடும்பத்தில் ஒரு குட் நியூஸை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும்போது அதனை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் சிலர், அவருக்கு திருமணமாகப் போவதாக கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் அந்த குட் நியூஸ் என்னவென்று நேகா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “என் அம்மா கடந்த 8 மாதங்களாக கர்ப்பமாக இருந்தார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனது தாய்க்கும், தங்கைக்கும் உங்களின் ஆசியை வழங்குங்கள். தற்போதைக்கு இவர்கள் தான் என்னுடைய உலகம்.
இதை பார்த்தபின் வரும் மோசமான கமெண்டுகளை எல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன். அவ்வாறு செய்து உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தற்போது அக்கா என்பதை விட தாயாக உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.