தமிழில் சந்திரமுகி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனு சூட். இந்தியில் பிரபல வில்லன் நடிகராக இருக்கிறார். சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். வெளிநாட்டில் தவித்த மாணவ, மாணவிகளை விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்தார். கொரோனாவால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தார்.
அவரது இதுபோன்ற சேவைகளை பாராட்டும் விதமாக தெலுங்கானாவில் சோனுசூட்டுக்கு கோவில் கட்டினர். இந்த நிலையில் தனது சகோதரி மாளவிகா அரசியலில் ஈடுபட இருப்பதாக சோனுசூட் அறிவித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘எனது சகோதரி மாளவிகா மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மோகா தொகுதியில் அவர் போட்டியிடுவார்” என்றார்.
இதுபோல் சோனுசூட்டும் அரசியலில் ஈடுபட இருக்கிறார். பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.