யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வரும் 14ந்தேதி வெளியாக இருக்கும் படம் மதில். கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படம் பற்றி அளித்த பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது, ‘மனசாட்சி சொல் படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைகுரல்தான் ‘மதில்’. கொரோனா காலகட்டத்தில் நடித்து முடித்தேன். கதையை கேட்டதும் தியேட்டருக்கே பண்ணலாமே என்றுகூட கேட்டேன். கதை முதல் உருவாக்கம் வரை அனைத்துமே அப்படி பிரம்மாண்டமாக தான் இருந்தது. ஓடிடி வளர்கிறது. அதை தடுக்க முடியாது. ஆனால் இது இன்னொரு தளம் தானே தவிர தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ரசிகர்கள் தாங்கள் விரும்பும் படங்களை தியேட்டர்களில் பார்க்கத்தான் விரும்புவார்கள்.
என்னிடம் பெரிய ஹீரோக்களை வைத்து அதிக படங்கள் இயக்கி இருக்கிறீர்கள். அவர்ளுக்கான பார்முலா என்ன என்று கேட்கிறார்கள். அப்படி எதுவுமே தனியாக கிடையாது. இனி ஹீரோக்களே ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வார்கள். சூர்யா அதை தொடங்கி வைத்துள்ளார். டிஜிட்டல் வந்த பிறகு சினிமாவில் செலவு குறைந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி இல்லை. அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. சரியான திட்டமிடல் தான் செலவை குறைக்கும்.
ரஜினி, கமலை மீண்டும் இயக்குவீர்களா? என்று கேட்டால் நான் தயாராக தான் இருக்கிறேன். கதைகள் நிறைய இருக்கின்றன. சில கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். அதற்கான நேரம் வரவேண்டும். சத்யராஜ் சாரை இயக்க விரும்பினேன். அது நடக்கவில்லை. ஆனால் அவருடன் நடித்தேன். பிரபுதேவாவுடன் இணைய திட்டமிட்டேன். நடக்கவில்லை. கமல், உதயநிதி, குஷ்பு என நண்பர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். அனைவருமே வெற்றி பெற விரும்புகிறேன். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தபோது எனக்கே வருத்தமாக தான் இருந்தது. அறிவித்த சில நாட்களுக்கு பின் பேசினேன். ஆனால் எல்லாவற்றையும்விட அவரது ஆரோக்கியம் தான் முக்கியம்’. இவ்வாறு அவர் கூறினார்.