நடிகை நமீதா 2004-ல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் எடை கணிசமாக கூடியது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன. பின்னர் காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டார். தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.
இந்த நிலையில் தனது உடல் எடை கூடிய, எடை குறைத்த இரண்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் பற்றிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ‘‘10 வருடத்துக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுக்காகவே பதிவிட்டுள்ளேன். உடல் எடை கூடியபோது, எனக்கு அதிக மன அழுத்தமும் அசவுகரியமும் இருந்தது. யாருடனும் பழக முடியவில்லை. இரவில் தூக்கம் வரவில்லை. அதிக உணவை சாப்பிட்டேன்.
தினமும் பீட்சா சாப்பிட்டேன். எடை கூடி எனது தோற்றமே மாறியது. எடை 97 கிலோவாக இருந்தது. சிலர் நான் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக பேசினர். ஆனால் எனக்கு சினைப்பை, மற்றும் தைராய்டு நோய்கள் இருந்தது எனக்குத்தான் தெரியும். தற்கொலை செய்து கொள்ளும் சிந்தனைகள் அதிகம் வந்தன. எனக்கான மன அமைதி கிடைக்கவில்லை.
ஐந்தரை வருட மன அழுத்தத்துக்கு பிறகு இறுதியில் எனது கிருஷ்ணரையும் மகா மந்திராஸ் தியானத்தையும் கண்டுபிடித்தேன். டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லவில்லை. எனது தியானமும் கிருஷ்ணருக்காக செலவிட்ட நேரமும்தான் சிகிச்சை. இறுதியில் அமைதியையும் அன்பையும் கண்டுபிடித்தேன். நீங்கள் வெளியில் தேடும் விஷயங்கள் உங்களுக்குள் இருக்கிறது என்பதுதான் இதன் நீதி”. இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.
View this post on Instagram