Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

சுல்தான் திரைவிமர்சனம்

Sulthan Movie Review

நாயகன் கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியன், ஒரு மாபெரும் தாதாவாக இருக்கிறார். அவருக்கு கீழ் வேலை பார்க்கும் ரவுடிகளும் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். சிறு வயதிலேயே அம்மா இறந்துவிட, தந்தையின் ரவுடி கூட்டத்திற்கு இடையில் தான் வளர்க்கிறார் நாயகன் கார்த்தி.

பின்னர் படித்து வெளியூரில் வேலை பார்த்து வரும் கார்த்தி, விடுமுறைக்காக ஊருக்கு வரும் சமயத்தில் நெப்போலியன் இறந்துவிடுகிறார். இதன்பின் அந்த ரவுடி கூட்டத்திற்கு தலைவனாகும் கார்த்தி, அவர்களை நல் வழிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நினைக்கிறார்.

இதனிடைய, ஊர் விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் ஒரு நிறுவனம் பிரச்சனை கொடுக்கிறது. அவர்களை எதிர்க்க தன்னுடைய ரவுடி கும்பலை பயன்டுத்துகிறார் கார்த்தி. இதையடுத்து என்ன ஆனது? ரவுடிகளை வைத்து விவசாயத்தை காப்பற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கார்த்தி, படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் இவர், இப்படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், நடனம் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வந்து ஸ்கோர் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளில் எதிரிகளை பந்தாடி இருக்கிறார்.

நாயகி ராஷ்மிகா, இவருக்கு இதுதான் முதல் நேரடி தமிழ் படம், இதில் கிராமத்து பெண்ணாக வருகிறார். இவருக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரமாக இருந்தாலும், தனது கியூட்டான நடிப்பால் ரசிக்க வைத்துள்ளார்.

கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியனும், இவருக்கு நண்பராக வரும் லாலும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். யோகி பாபுவும், சென்ராயனும் அவ்வப்போது வந்து சிரிக்க வைத்துள்ளனர்.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவற்றை திறம்பட கையாண்டுள்ளார். கதைக்களம் வித்தியாசமானதாக இருந்தாலும், திரைக்கதையின் நீளத்தை குறைத்திருந்தால், சுல்தானை இன்னும் ரசித்திருக்கலாம். கமர்ஷியல் படமாக இருந்தாலும் விவசாயத்தை பற்றிய கருத்துகளை கூறி பலம் சேர்த்திருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது யுவனின் பின்னணி இசை தான். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரது இசை வேற லெவல். விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் அருமை. சத்யன் சூரியனின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘சுல்தான்’ ஆக்‌ஷன் விருந்து.