நேற்று, உத்தர பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காவலர் பணிக்கான காலியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வு, அம்மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 2,385 மையங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், உத்தர பிரதேச காவலர் ஆட்சேர்ப்பு மற்றும் பணியுயர்வு வாரிய (UP Police Recruitment and Promotion Board) வலைதளத்தில் பதிவாகிய “12258574” எனும் எண் கொண்ட ஒரு அனுமதி சீட்டில், பிரபல இந்தி திரைப்பட நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை கண்ட தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையின் சைபர் பிரிவு இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், கன்னோஜ் (Kannauj) பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட இந்த அனுமதி சீட்டு போலியானது என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அந்த விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தகவல்களும் போலியானவை என தெரிய வந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள செல்போன் எண், மகோபா (Mahoba) பகுதியில் உள்ள தேர்வுக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரது எண் என விசாரணையில் தெரிகிறது.
இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத எவரும் வரவில்லை என தேர்வு மையம் அறிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரித்து வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த அனுமதி சீட்டின் புகைப்படத்தை கண்டு பயனர்கள் சுவாரஸ்யமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.