‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீதிபதி சந்துரு வக்கீலாக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது? என்பதே ‘ஜெய்பீம்’ படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் படத்தில் பேச முயற்சித்து இருக்கிறோம். பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளது போல எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கும், படக்குழுவினருக்கும் இல்லை.
ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இந்த திரைப்படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’, என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்து இருக்கிறோம்.
எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன, பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு.
படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம். ஒருவரை (ஜெ.குருவை) குறிப்பிடுவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொல்லும் அந்த கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக சிலர் தெரிவிக்கிறார்கள். எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு எந்த பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடுவதாக கருதப்பட்டால் அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்ட குரல், பெயர் அரசியலால் மடை மாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.
சகமனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதும் எல்லா தரப்பு மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. @draramadoss அவர்களுக்கு… #JaiBhim pic.twitter.com/tMAqiqchtf
— Suriya Sivakumar (@Suriya_offl) November 11, 2021