சரமாரி போன் கால்கள்.. அதிமுக எம்.எல்.ஏக்களை கதறடிக்கும் தொகுதி மக்கள்!

Bookmark and Share

சரமாரி போன் கால்கள்.. அதிமுக எம்.எல்.ஏக்களை கதறடிக்கும் தொகுதி மக்கள்!

சசிகலா ஆதரவாளர்களால் ரிசார்ட்டில் கொண்டு போய் சிறை வைக்கப்பட்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களின் நிலைமை ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதாம். அவர்களைக் காணவில்லை என்று கூறி ஆங்காங்கே வழக்குகள் போடப்பட்டுக் கொண்டுள்ளன. மறுபக்கம், அவர்களது செல்போன்களுக்கு வாக்காளர்கள் போனைப் போட்டு தப்பா முடிவெடுக்காதீங்க. மாநில நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுங்க என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இப்படி திடீரென செல்வாக்கு உயரும், மக்கள் அன்பைப் பொழிவார்கள் என்று இவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லையாம். ஆனால் தற்போது இவர்கள் நினைத்தாலும் கூட மீண்டு வர முடியாத அளவுக்கு சசிகலா குரூப்பிடம் சிக்கியுள்ளனராம். அவர்களில் பலர் தற்போது ஓ.பி.எஸ் ஆதரவாக திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறுபக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் விசித்திரமான ஒரு சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதை யார் ஆரம்பித்து வைத்தார்களோ தெரியவில்லை.. ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்களை கதறடித்துக் கொண்டிருக்கின்றனர்.

உங்களது எம்.எல்.ஏக்களுக்குப் போன் போட்டு வெளியே வரச் சொல்லுங்கள், நல்ல முடிவை எடுக்கச் சொல்லுங்கள், சசிகலாவை ஆதரிக்காதீர்கள் என்று சொல்லுங்கள் என்று கூறி தொலைபேசி எண்களுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் பட்டியலை வாட்ஸ் ஆப்பில் பரவ விட்டுள்ளனர். இது காட்டுத் தீ போல பரவி பலரும் போனைப் போட்டு துளைத்தெடுத்து வருகின்றனராம்.

அவர்களில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. வளர்மதியுடன் ஒரு பெண் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் சிக்கலை வளர்மதிக்கு ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்களை மதிக்காத வகையில் அவர் பேசியது அதிமுகவினரையும், பொதுமக்களையும் அதிர வைத்துள்ளது. எனக்கா ஓட்டுப் போட்டீங்க என்று அவர் தெனாவெட்டாக கேட்டதும் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பலருடைய செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதாம். வீட்டினரே கூட தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பலர் உள்ளனராம். அத்தனை பேரையும் அந்த அளவுக்கு கெடுபிடிகளுடன் அடைத்து வைத்துள்ளனராம் சசிகலா குரூப்பைச் சேர்ந்தவர்கள். உள்ளே போய் 2 நாட்களாகி விட்டதால் பலருடைய குடும்பத்தினர் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர். ஒரு ஊரில் பெண் எம்.எல்.ஏவின் கணவர் கோர்ட்டில் வழக்கே போட்டுள்ளார் தனது மனைவியைக் காணவில்லை என்று கூறி.

அதை விட முக்கியமாக சமூக வலைதளங்களில் அதிமுக எம்.எல்.ஏக்களை மக்கள் தாறுமாறாக வறுத்தெடுத்துக் கொண்டுள்ளனர். சசிகலாவைப் போய் ஆதரிப்பதா என்று கேட்டு அதிமுக எம்.எல்.ஏக்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களில் பலர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். அதை நிராகரித்து விடவும் முடியாது. ஆனால் விமர்சனங்கள் அதிகமாக உள்ளன என்பதை மறுக்க முடியாது.

கிடைக்கும் எம்.எல்.ஏக்களிடம் பேச வாய்ப்பு கிடைப்போர், தயவு செய்து தவறான முடிவெடுக்காதீர்கள். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையே ஆதரியுங்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்டு வருகின்றனர். பலர், தவறான முடிவு எடுத்தால், தொகுதிப் பக்கம் தயவு செய்து வந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கும் வாசகங்களையும் சமூக வலைதளங்களில் போட்டு வருகின்றனர்.

ஆனால் இப்படி போன் போட்டு எம்.எல்.ஏக்களை தொல்லை செய்வது தவறு என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் டிவீட் போட்டுள்ளார். எங்களுக்கென்று முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லையா என்றும் அவர் கேட்டுள்ளார். ஆனால் அவரது பேச்சுக்கும் பலர் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படித்த நீங்களே இப்படி சசிகலாவை ஆதரித்தால் எப்படி என்றும் அவர் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

மொத்தத்தில் ஒட்டுமொத்தமாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கெட்ட பெயரை சம்பாதித்து விட்டனர் சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions