பீப் சாங் விவகாரம் - நடிகர் சங்கம் விளக்கம்

Bookmark and Share

பீப் சாங் விவகாரம் -  நடிகர் சங்கம் விளக்கம்

சிம்பு எழுதி பாடி அனிருத் இசையமைத்திருப்பதாக கூறப்படும் பீப் சாங், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பாடல் பற்றி நடிகர் சங்கம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘‘முறையாக வெளியிடப்பட்டதா?, திருட்டுத்தனமாக கசிந்ததா? என்ற சந்தேகத்திற்கிடையே சமீபத்தில் அனிருத் இசையமைத்து, சிம்பு எழுதி பாடியதாக வெளியாகியிருக்கும் பாடலில் ‘பீப்’ செய்யப்பட்டு கேட்பவர்களின் யூகத்திற்கு விடப்பட்ட வார்த்தைகள் மிக கொச்சையான உணர்வையும், பெண்களை இழிவு படுத்தியும் இருப்பதினால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது. கண்டிக்கத்தக்கது.

ஒரு கலைஞனின் கருத்து மக்களிடையே சென்றடைந்து அது எதிர் விமர்சனங்களை ஏற்படுத்துகிறபோது, அது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மக்களின் உணர்வை மதித்து வருத்தமோ, மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகிறது.

அந்த கலைஞர்களுக்கு கால அவகாசம் கொடுத்து காத்திருந்தோம்.

அதோடு தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஒரு மாதமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எல்லா பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் வேலை செய்து வந்தது. தொடர்ந்து இந்த விஷயத்தில் உடனடியாக கருத்து தெரிவித்தால் கடந்த தேர்தலில் எங்கள் அணிக்கு எதிராக சிம்பு தீவிரமாக செயல்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்று எங்கள் கருத்தாக இருந்தது.

வருகிற 26-ம் தேதியில் நடக்க இருக்கும் செயற்குழுவில் இதுபற்றி விவாதித்து கருத்து தெரிவிக்கலாம் என்றிருந்தோம். ஆனால், சூழ்நிலை கருதி நிறுவனக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

இன்று இந்த விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்ல, நீதி மன்றத்தையும் சென்றடைந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் விரைவில் இதிலிருந்து விடுப்பட்டு புதுப்பொலிவோடு கலைப்பணி ஆற்ற வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் இந்த பீப் பாடல் என்கிற இந்த நிகழ்வு, சம்மந்தப்பட்ட கலைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லா கலைஞர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது.

வருங்காலத்தில் இப்படி மீண்டும் ஒரு சங்கடமான சூழல் உருவாகக் கூடாது என்ற விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதை இச்சமயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவுறுத்த விரும்புகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions