"பெரியம்மா" ஜெ.வை சின்னம்மா ரசிகர் பொன்னையன் விமர்சித்த "நாலாந்தர" பேச்சும் வைரலாகிறது!

Bookmark and Share

"அதிமுகவினரின் சின்னம்மா" சசிகலாவின் ரசிகர்களாகி விட்ட வளர்மதி, பொன்னையன் வகையறாக்களின் பழைய பேச்சுகள் நெட்டிசன்களிடம் சிக்கி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு சேவகம் செய்ய போயஸ் கார்டன் பங்களாவுக்குள் நுழைந்தவர் சசிகலா.

ஜெயலலிதா மறைந்த பின்னர் போயஸ் கார்டன் பங்களாவையும் கைப்பற்றிய கையோடு தன்னையே ஒரு டூப்ளிகேட் ஜெயலலிதாவாக உருமாற்றிக் கொண்டு வருகிறார் சசிகலா.இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் நாற்காலியில் சசிகலா அமர்ந்துவிட்டார்.

அவரை 'சின்னம்மா' என எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான பொன்னையன் உள்ளிட்டோரும் துதிபாட தொடங்கிவிட்டனர். அத்துடன் ஜெயலலிதாவை 'பெரியம்மா' எனவும் பதவி உயர்வு கொடுத்துவிட்டனர். இப்படி 'சின்னம்மா' ரசிகர்களாகிவிட்ட வளர்மதி, பொன்னையன் போன்றோரின் ஜெயலலிதாவுக்கு எதிரான பழைய பேச்சுகள் நெட்டிசன்களால் இப்போது அதிகமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியில் இருந்த பொன்னையன், ஜெயலலிதாவை நாலாந்தரமாக விமர்சித்த பேச்சுதான் இப்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பேச்சின் ஒரு பகுதி: 1980ல் எங்கோ யாருக்கோ டாட்டா காட்டியவர்கள் உடன்கட்டை ஏறப்போகிறேன் என்கிறார்கள். அவர்களைப் பற்றி தமிழகத்து தாய்மார்களுக்கு நன்கு தெரியும். அந்த கருநாகம் எப்படியும் தீண்டிவிடும் என்று கருதித்தான் அதை ஒதுக்கிவைத்தார்.

சத்யா ஸ்டுடியோவில் அதை அமைச்சர்களிடமும் பொதுக்குழுவினரிடம் தெளிவுபடுத்தியவர் புரட்சித்தலைவர். அன்றைக்கே 94 எம்எல்ஏக்கள் கையொப்பமிட்டு கருநாகத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் என்றோம். புரட்சித்தலைவர் படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தொலைபேசியைத் துண்டித்தது மட்டுமல்ல. மூலையில் முடக்கி வைத்தார். பீரங்கி வண்டியில் புரட்சித்தலைவர் உடல் ஏற்றிய பின் அது முழுக்க, முழுக்க ராணுவத்திற்குச் சொந்தம் அதில் யாரும், ஏன், ஆளுநரே கூட ஏற முடியாது. அப்படி இருக்க அந்த நாலாந்தரப் பெண்மணி, செருப்புக்காலுடன் அந்த வண்டியில் ஏறினார். கட்சியின் பொதுச்செயலாளர் மறைந்தவுடன் மூத்த துணைப் பொதுச்செயலாளர் அந்த பொறுப்புக்கு வருகிறார். கட்சியின் சட்டதிட்டமே அவ்வாறுதான் உள்ளது. இவ்வாறு நீள்கிறது பொன்னையனின் பேச்சு. இதுதான் இப்போது நெட்டிசன்களால் அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions