மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?

Bookmark and Share

மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?

பிரபல சினிமா இயக்குனர் மணிரத்தினம் வீட்டின் மீது குண்டு வெடித்தபோது, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், ஊழலும் அராஜகமும் பெருகி விட்டதாகவும் கொதித்தெழுந்த நடிகர் ரஜினிகாந்த், இதே நிலைமை நீடித்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பேட்டியளித்திருந்தார்.

அப்போது நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது பெரும் முழக்கமாக ஒலித்த இந்த ‘ரஜினி வாய்ஸ்’ அப்போது ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்து தந்ததாக அரசியல் நோக்கர்கள் இன்றளவும் கருதுகின்றனர்.

அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வியுடன் ஊடகவியலாளர்கள் அவரை மொய்க்கத் தொடங்கினார்கள். வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரை ரஜினியின் நிலைப்பாடு என்ன? என்பது ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக இருந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்பதை அவர் சமீபத்தில் தெளிவுப்படுத்தி விட்டார்.

ஆக, தேர்தல்களின்போது அநேகமாக வெற்றி-தோல்வியை ஓரளவுக்கு நிர்ணயிக்கும் கணிப்புக்கு ரஜினியின் குரல் எப்போதுமே உறுதுணையாக இருப்பதாக தமிழக வாக்காளர்கள் நினைக்கின்றனர்.

இது தமிழக வாக்காளர்களுக்கு மட்டுமல்ல; மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பது இனிவரும் நாட்களில் உறுதிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான, அச்சாரமாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டுக்கு இன்று காலை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தனது குடும்பத்தாருடன் சென்று அளவளாவி விட்டு வந்த சந்திப்பை எடுத்து கொள்ளலாம்.

‘முத்து’ படத்துக்கு பின்னர் ஜப்பானில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகர் ரஜினிகாந்த், அதிரடி நாயகன் ஜாக்கி சானுக்கு இணையாக ஆசிய நாடுகளில் உள்ள ரசிகர்களின் மனதில் நீக்கமற இடம்பிடித்துள்ளார்.

குறிப்பாக, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளதால் பின்னர் வெளியான சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட ரஜினிகாந்தின் படங்களுக்கு அந்நாடுகளில் பெரிய வரவேற்பும், வசூலும் கிடைத்தது. 

இதை மனதில் வைத்தோ.., என்னவோ.., அவரது நடிப்பில் உருவான ‘கபாலி’ திரைப்படத்தின் கதைக்களம் மலேசியாவை மையமாக வைத்து அமைக்கப்பட்டது. பெரும்பான்மையான காட்சிகளும் மலேசியாவில்தான் படமாக்கப்பட்டன.

அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட ‘கபாலி’ மலேசிய தமிழர்களிடையே மிகச் சிறந்த முறையில் ஆரவாரமான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை ‘பிரமோட்’ செய்வதற்காக மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமான நிறுவனம் ‘கபாலி’ பட விளம்பரங்களுடன் தங்களது விமானங்களின் வெளிப்புறத்தை அலங்கரித்திருந்தது.

கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் துப்பாக்கி சப்தம் எதுவும் கேட்கவில்லை. அவர் போலீசில் சரணடைந்ததாக படத்தின் திரையில் தோன்றும் எழுத்துகளை மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பரிமாறினர்.

பொதுவாக எல்லா சினிமாக்களின் கிளைமாக்ஸ்களும் அநீதி தோற்பது போலவும், நீதியும் தர்மமும் வெற்றி பெறுவதாகவும் முடிவதுதான் வாடிக்கை. அவ்வகையில், மலேசிய மண்ணில் நடப்பதாக பின்னப்பட்ட ‘கபாலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு ‘கேங்க்ஸ்டரின் முடிவு’ ‘மீண்டும் தொடரும்’ பாணியில் அமைவது அந்நாட்டு மக்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் மட்டும் அவர் போலீசில் சரணடைந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி அப்போது எழுந்தது.

இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். 222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மேலவை ஆகிய இரு அவைகளைக் கொண்டதாகும்.

கடந்த 2009-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேமு–அம்னோ கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துவரும் நஜீப் துன் ரசாக் மீது சமீபகாலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, அரசு நிதிக்காக அந்நாட்டின் தலைமை வங்கி ஒதுக்கீடு செய்த நூறு கோடி அமெரிக்க டாலர்கள் பிரதமர் ரஜாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் மடைமாற்றி திருப்பி விடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை நஜீப் ரஜாக் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விவகாரம் மலேசிய மக்களில் சிலரது மனங்களில் நஜீப் ரஜாக் மீது ஒருவித அதிருப்தி உருவாகி வருவதை ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன. இதனால், சரிவில் இருந்து தனது செல்வாக்கை பாதுகாத்துகொள்ள அவர் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாகதான் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் - நஜீப் ரஜாக் இடையே இன்று நிகழ்ந்த சந்திப்பை அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.
குறிப்பாக, மலேசிய நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான சுமார் 3 கோடி பேர்களில் இங்கு வாழ்ந்துவரும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கையை தனக்கு சாதகமான வாக்கு சதவீதமாக மாற்றிகொள்ளும் நோக்கத்தில் தமிழர்களின் அபிமான திரை நட்சத்திரமான ரஜினிகாந்தை பிரதமர் நஜீப் ரசாக் இன்று சந்தித்ததாக மலேசிய தமிழர்களில் சிலர் கருதுகின்றனர்.

ஒருகாலத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது இங்குள்ள மக்களிடம் எடுபட்ட ரஜினியின் குரல் மலேசிய தேர்தலில் எடுபடுமா?, சரிவில் இருந்து நஜீப் ரசாக்கை காப்பாற்றுமா? மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post your comment

Related News
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!
கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions