இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி விவாகரத்துக்கு சமரசம்

Bookmark and Share

இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி விவாகரத்துக்கு சமரசம்

சிறைச்சாலை, சிநேகிதி உட்பட பல தமிழ் படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இவர், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். அதேபோல நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் லிசி. இவரும், பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில், பிரியதர்ஷனுக்கும், லிசிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

இதற்கிடையில், பிரியதர்ஷனிடம் விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டிலும், பிரியதர்ஷன் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழும்பூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டிலும் லிசி வழக்கு தொடர்ந்தார்.

இவர்கள் இருவருடைய பெயர்களிலும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. 

இந்த சொத்துக்களின் மீது உரிமை கோரி சென்னை ஐகோர்ட்டில், பிரியதர்ஷன் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரையும் நேரில் அழைத்து நீதிபதி சசிதரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரண்டு முறை நடந்த பேச்சுவார்த்தைகளில், பிரியதர்ஷனுக்கும், லிசிக்கும் சமரசம் ஏற்பட்டது. இருவரும் தங்களது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி சுமுகமாக பிரச்சினைகளை தீர்வு காண சம்மதித்தனர். 

இதையடுத்து இருவரும் சமரச உடன்படிக்கை மனு ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘போர்பிரேம் டப்பிங் தியேட்டர்’, தங்க நகைகள், சென்னை, திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை லிசியிடம் ஒப்படைப்பது எனவும், சிங்கப்பூரில் இருவரும் சேர்ந்து வாங்கிய ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்தை விற்பனை செய்து இருவரும் சமமாக பிரித்துக்கொள்வது எனவும், இந்த இறுதி சமரச முடிவிற்குப் பிறகு இருவரும் எதிர்காலத்தில் அவரவர் வசம் உள்ள பிற சொத்துக்களில் உரிமை கொண்டாட மாட்டோம்’ என்றும் கூறியிருந்தனர். 

அதேபோல, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, விவாகரத்து கேட்ட வழக்கு ஆகியவற்றை திரும்ப பெறுவதாக லிசி கூறியுள்ளார்.

இதன்பின்னர், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சுமுகமாக பிரிந்து விடுவோம் என்றும் இருவரும் உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சமரச உடன்படிக்கை மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பிரியதர்ஷன், லிசி ஆகியோருக்கு இடையே இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions