துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ​ 'மணல் நகரம்' தயாரிப்பாளரின் அனுபவம்

Bookmark and Share

துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ​ 'மணல் நகரம்' தயாரிப்பாளரின் அனுபவம்

"நேற்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது ரசிகர்கள் பரபரப்பாக இருந்தார்கள்.ஏதோ இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடப்பது போல பார்த்தார்கள்.

அந்தளவுக்கு உணர்ச்சிகரமாக மாறியிருந்தார்கள். ஆனால் துபாய் போன்ற வெளிநாடுகளில் இந்தியர் பாகிஸ்தானியர் சகோதரர் போல இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வாழ்கிறார்கள்.'' இவ்வாறு கூறுகிறார் 'மணல் நகரம்' படத் தயாரிப்பாளர் எம்.ஐ.வசந்த்குமார்.

தான் தயாரித்த 'மணல் நகரம்' படத்தை முதன்முதலாக முழுதும் துபாயில் எடுத்துள்ள அவர் ,தன் அனுபவங்ளைக் கூறுகிறார் .

முதன் முதலாக முழுப்படமும் துபாயில்!

தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் முழுப்படமும் துபாயில் உருவாகியுள்ளது. என்றால் அது 'மணல் நகரம்' தான். மொத்தம் 60 நாட்கள் முழுப்படத்தையும் அங்கே முடித்திருக்கிறோம். ஒரே  ஒரு காட்சிக்கு அனுமதி கிடைக்காததால் அதை மட்டும் இந்தியாவில் 3 நாட்கள் எடுத்தோம்.

துபாயில் படமெடுக்க ஏன் எல்லாரும் தயங்குகிறார்கள் தெரியுமா? அங்குள்ள சட்டதிட்டங்கள் கடுமையானவை. அனுமதி பெறுவதில் பல கட்டுப்பாடுகள், விதி முறைகள் இருக்கின்றன. முதலில் படத்தின் முழு திரைக்கதையையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் அதுவும் அரபியில்மொழிபெயர்த்து கொடுக்க வேண்டும். அதைப் படித்து பரிசீலித்த பிறகுதான் அனுமதி கிடைக்கும்.

எந்தக்காட்சிக்கு எங்கு அனுமதி பெற்று இருக்கிறோமோ அங்குதான் எடுக்கவேண்டும். சற்று இடம் மாற்றினாலும்அனுமதி கிடைக்காது. ஒப்புக்கொள்ள மாட்டார்கள். படப்பிடிப்பு நடக்கும் போது  அதுதான் அனுமதிவாங்கியிருக்கிறோமே என்று அலட்சியமாக இருந்து விட முடியாது. கையிலேயே அனுமதியை வைத்திருக்க வேண்டும் எப்போது  வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அனுமதி கடிதத்தை கேட்பார்கள் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வித அனுமதி இருக்கும். துபாயில் இருப்பதுபோல சார்ஜாவில் இருக்க முடியாது. மாறும்.

திடீரென்று எங்களை முற்றுகையிட்ட போலீஸ்!

ஒரு வீட்டின் முன் நாங்கள்  படக்குழுவினர்  இருந்தோம். நாங்கள் படம்பிடிக்க அனுமதி பெற்ற பகுதிதான். படப்பிடிப்பு தொடங்கும் முன்பு கோணம்பார்க்க ஏற்பாடு செய்ய ஒரு இடத்தில் கேமராவை வைத்திருந்தோம். அது ஒரு வீட்டை நோக்கி இருந்தது திடீரென ஒரு போலீஸ் படை எங்களை முன்றுகையிட்டது. 'இந்தக் கேமராவில் ஏன் இந்த வீட்டை படம் எடுக்கிறீர்கள்? 'என்றார்கள். 'இங்கே இன்னமும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவே இல்லை. எடுக்கப் போகும் இடம் இந்த சாலைதானே தவிர விடல்ல' என்றோம். 'இது யார் வீடு தெரியுமா இது ஒரு ஷேக் வீடு. அது மட்டுமல்ல அவர் ஒரு நீதிபதி தெரியுமா?' என்றார்கள்.

அங்கு எதையும் எடுக்கவில்லை என்றாலும் தூக்கி வாரிப்போட்டது. எடுத்ததை காட்டச் சொன்னார்கள். டிஜிட்டல் என்பதால் காட்டினோம் அவர்களைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அப்போது நினைத்தோம் படத்தை பிலிமில் எடுத்திருக்கால் என்ன ஆகியிருக்கும்? என்று.

என்னை ஏன் படமெடுத்தீர்கள்? மிரட்டிய பெண்மணி!

ஒரு சாலையில் படமெடுத்துக் கொண்டு இருந்த போது.. ஒரு பெண்மணி சத்தம் போட்டபடி ஓடி வந்தார். என்னை ஏன் படமெடுத்தீர்கள் என்று சத்தம் போட்டார் அவர் பர்தா பேண்ட் போட்டிருந்தார். உங்களை எடுக்கவில்லை என்று கூறினோம். போலீசைக் கூப்பிட்டார். போட்டுக்காட்டினோம். நாங்கள் எடுத்ததைக் காட்டினோம். நாங்கள் எடுத்ததில் அந்தப் பெண்மணி வரவே இல்லை.

அங்கு பெண்கள் பர்தாவுடன்தான் வருவார்கள். அப்படி படமெடுத்து புகார் கொடுத்தால் உடனே கைதுதான். உள்ளே போனால் வெளியே வருவது அவ்வளவு சுலபமல்ல .அவர்களிடம் நாங்கள் விளக்கினோம் எங்கள் கதையில் கூட பெண்களை கவர்ச்சியாகக் காட்டவில்லை. காதல் கதை என்றாலும் இவர்கள் மரத்தைச் சுற்றவில்லை. கட்டிப் பிடிக்கவில்லை அந்த அளவுக்கு கண்ணியமாகவே படமெடுத்து வருகிறோம் என்றோம்

அனுமதிக்க மறுக்கப்பட்ட காட்சி!

ஒரு மாடியிலிருந்து கீழே விழுந்து கிடப்பது போல எடுக்க வேண்டிய காட்சி அது. பலர் துரத்தி வரும்போது மாடியிலிருந்து கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் கிடப்பது போல எடுக்க வேண்டும். துரத்துவது போல எடுத்தோம். ஒருவர் அடிபட்டுக் கிடப்பது போல செயற்கை ரத்தம் சிதறவிட்டிருந்தோம் இதை யாரோ நிஜம் என்று நினைத்து போலீசுக்கு போன் செய்து விட்டார்கள்.

போலீஸ் எங்களைப் பிடித்து விட்டது. படப்பிடிப்பு என்றோம். நம்பவில்லை. கேமரா எங்கே என்றார்கள்  கேமராக்களை பல இடங்களில் மறைவாக வைத்து இருந்தோம்.இப்படி எடுக்கவே திட்டமிட்டோம். ஆனால் எல்லாமும் பார்த்துவிட்டு இந்தக்காட்சி எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்கள்.
அந்தப் பகுதியில் சமீபத்தில்தான் ஒரு குழந்தை 5 வது மாடியிலிருந்து விழுந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த தாய் அதேபோல் கிழே குதித்து குழந்தையருகே விழுந்து தற்கொலை செய்து கொண்டாராம். இது அங்கு பரபரப்பானதாம். எனவே மறுத்து விட்டார்கள். இந்தக் காட்சியை மட்டும்தான் இந்தியாவில் 3 நாட்கள் எடுத்தோம்.

கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் மணலில்!

துபாயின் பாலைவனம் ஓர் அழகுதான் அங்கு பாலைவனத்தை புனிதமாக கருதுகிறார்கள்.ஒரு குப்பை இருக்காது.சுத்தமாக இருக்கும். அங்கே அசுத்தம் செய்தால் கைது செய்து விடுவார்கள்.  அங்குள்ள மணல் மெலிதாக மாவு போல இருக்கும். காற்றடித்தால் மூக்கில் புகுந்து விடும். அப்படிப்பட்ட மணலில் காலை வேளைகளில் எடுத்தால்தான் சூடும் குறைவு. காற்றும் குறைவு அங்கு சூர்யோதயம் அதிகாலை 5.30மணிக்கே வந்து விடும். 2 மணிநேரம் பயணம் செய்து அங்கு போய்ச்சேர வேண்டுமானால் 3.30.மணி க்கே புறப்பட்டுவிட வேண்டும். தங்கி இருக்கும் இடத்திலிருந்து 2 மணிநேரம் பயணம். பாலைவனத்தில் மட்டும் 1 மணிநேரம். பயணம். அதன்பிறகுதான் அந்த இடத்தை அடையமுடியும் போகிற வழியில் ஒரு கூடாரம் போட்டிருந்தோம்.

11 மணி ஆகிவிட்டால் வெயில் கொளுத்தும். மணல் கொதிக்கும். எனவே 10.30மணிக்குள் முடிக்கும் அளவில் திட்டமிட்டிருந்தோம்.கிரேன் ஷாட் எடுக்கும் போது கிரேன் மணலில் சறுக்கும். எனவே பலர் பிடித்துக் கொள்ள வேண்டும். 6.7.பேர் தேவை. இப்படி சிரமப்பட்டு எடுத்தோம். 10.30.ஆனதுமே மணல் சூடேறிவிடும் இருந்தாலும் நடிகர்கள் படக் குழுவினர் தாங்கிக் கொண்டு ஒத்துழைத்தனர்.

இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை.!

அங்கு  இந்தியர், பாகிஸ்தானியர் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்களிடம் பகையுணர்ச்சி இல்லை. துபாயைப் பொறுத்தவரை எல்லாருமே அவர்களை இந்தியர் என்றுதான் சொல்வார்கள்.

எங்கள் படத்தில் 6 நாட்டுக்காரர்கள் முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார்கள். எகிப்து. பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், துபாய், பாகிஸ்தான், இந்தியர் என்று 6 நாட்டுக்காரர்கள் நடித்துள்ளனர்.

துபாயில் சுமார் 57 லட்சம்பேர் வசிக்கிறார்கள் என்றால் அரேபியர்கள் 25 லட்சம்,  தமிழர் -மலையாளிகள் மட்டுமே 29 லட்சம் பேர் இருப்பார்கள். மிதியுள்ளதுதான் மற்றவர்கள். அங்கு நாங்கள் ஆங்கிலம் பேசவோ அரபி பேசவோ அவசியமில்லை. அந்த அளவுக்கு தமிழர்களும் மலையாளிகளும் உதவினார்கள்.
பல மொழிக்காரர்கள் எங்களுக்காக தமிழ் வசனத்தை பேசி நடித்தனர்.

பாலைவனத்தில் நாங்கள் கேட்காமலே போய் தண்ணீர்கேனை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் நடந்து வந்து கொடுத்தார் ஒரு பாகிஸ்தான்காரர். அவர்கள் அவ்வளவு உதவினார்கள். நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள்.

மணல் நகரம் என்ன மாதிரியான படம்?

இது ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படம். நாடுவிட்டு நாடு போய் சோதனைகளைக் சந்திக்கும் கதையும் உண்டு. வாழ்க்கையில் முன்னேற சோலைவனம் செல்லாமல் பாலைவனம் செல்கிற ஒரு வனின் கதை என்றும் கூறலாம். மத நல்லிணக்கமும் பேசப்படுகிறது.ஒருதலைராகம் சங்கர் முக்கிய கேரக்டரில் நடித்து இயக்கியுள்ளார். நாயகன் ப்ரஜின் .நாயகிகள் தனிஷ்கா, வருணா ஷெட்டிஎனஇருவர் .இவர்களில்  வருணா ஷெட்டி துபாய்க்காரர்.

மற்ற கேரக்டர்கள் எல்லாம் புதியவர்களே நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர். பிரியனின் மாணவர் இவர். மிகவும் சிரமப்பட்டு உழைத்திருக்கிறார். இது இவருக்கு 4 வது படம் .இசை ரெனில் கௌதம் ,வசனம் ஆர்.வேலுமணி. நடனம். சோனி கோம்ஸ், ஸ்டண்ட் ராகேஷ் கண்ணன் என பலரும் உழைத்திருக்கிறார்கள். டிஜேஎம் அசோசியேட்ஸ் (DJM ASSOCIATES) சார்பில் நான் முதலில் தயாரித்துள்ள படம்.இது  படத்திற்கு நிறையவே சிரமப்பட்டோம். இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டதால் வலிகள் சுகமாகவே இருந்தன.

படம் வருகிற 27 ஆம்தேதி வெளியாக இருக்கிறது.'' இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment

Related News
இந்த காமெடிய வேற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! காமெடி காப்பி
வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை: `மாநகரம்' சதீஷ்
இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்
இதென்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வந்த சோதனை?
மாநகரம் படத்திற்கு சூர்யாவின் சர்டிஃபிக்கேட் ! சொன்னது என்ன
மாநகரம் படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்
மீண்டும் உருவாகிறது மணல் கயிறு
\'மணல்நகரம்\' படத்தின் துபாய் வில்லன் விகே.
காமெடி, திரில்லர் கதையை உருவாக்கும் கௌரவ்
உண்மைச் சம்பவத்தை படமாக்குவது கடினம்: சங்கர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions