சிம்பு திருந்துவார் என்று காத்திருக்கும் நாஞ்சில் சம்பத்

Bookmark and Share

சிம்பு திருந்துவார் என்று காத்திருக்கும் நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளராகவும், அதிகாரப்பூர்வ ஊடகத் தொடர்பாளர்களில் ஒருவருமான நாஞ்சில் சம்பத் குபீரென ‘காத்திருக்கிறேன்’ வைரலில் சிக்கியிருக்கிறார்.

‘இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதெற்கெல்லாம் காத்திருக்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்டேன்... 

"'இது குழந்தை பாடும் தாலாட்டு... இது நதியில்லாத ஓடம்’ என்று பாடல் எழுதிய டி.ராஜேந்தர் மகனா இப்படி சீரழிகிறார் என்று எண்ணுகிறபோது என் சிந்தை வலிக்கிறது. பெண்களைக் கண்களாக கொண்டாடுகிற பெருந்தன்மை உள்ள தமிழகத்தில்,  பெண்ணடிமைத்தனத்துக்கு முடிவு கட்டிய பெரியார் வாழ்ந்து வரலாறு படைத்த தமிழ்நாட்டில், இன்றைக்கு ஒரு இருண்ட காலத்துக்கு தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதைப் போல சிம்பு இப்படி ஒரு "பீப்" பாடலைப் பாடியதன் மூலம்,  தமிழகத்துப் பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார். அவர்களின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் திருந்துவார் என்று காத்திருக்கிறேன்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 28-வது நினைவு நாளில் அவரை வணங்கிப் போற்றும் அம்மா அவர்களுக்காக ஆயுதத்தைக் கீழே போடாத கழகத்தின் சிப்பாயாக அணிவகுக்கக் காத்திருக்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டில்  மிகப்பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சி. இந்தக் கட்சியை எந்த வகையிலும் எதிர்கொள்ள முடியாத சில பேர்வழிகள், மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து விட்டவர்கள், குடும்ப அரசியல் நடத்தி தமிழகத்தை குட்டிச் சுவராக்கியவர்கள், சொந்த சுய லாபத்திற்காக தமிழகத்தின் உரிமையைக் காவு கொடுத்தவர்கள், இன்றைக்கு தப்புத் தப்பாய் செய்கின்ற எல்லாப் பிரசாரத்தையும் அதே வழியில் எதிர் கொள்ளக் காத்திருக்கிறேன்.

ஆகவே... காத்திருக்கிறோம் என்று நான் மட்டும் சொல்லவில்லை. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனை மீட்டுத் தந்து அதை ஒரு பொதுத்துறை நிறுவனமாக மீண்டும் இயங்குவதற்கு வாய்ப்பளித்த அம்மாவை மீண்டும் முதல்வராக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.

காவேரி பிரச்னையில்,  நடுவர் மன்றத்தினுடைய இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு,  காவிரி நீரில் தமிழக மக்கள் உரிமையை நிலைநாட்டித் தந்த அம்மாவை அரியணையில் அமர்த்த, தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கி தென்னக மாவட்டங்களுக்கு பாசனத்துக்கும், தாகத்துக்கும், தண்ணீருக்கும் உத்தரவாதம் தந்த அம்மாவை மீண்டும் முதலமைச்சராக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களோடு நானும் மக்களில் ஒருவனாகக் காத்திருக்கிறேன்...!’’


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions