ராஜீவ் காந்தி வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி நடிகர்-நடிகைகள் ஊர்வலம் நடத்த திட்டம்

Bookmark and Share

ராஜீவ் காந்தி வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி நடிகர்-நடிகைகள் ஊர்வலம் நடத்த திட்டம்

நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 26 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர்.

இவ்வளவு காலம் அவர்கள் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பது கொடுமையானது. சுப்ரீம் கோர்ட்டு இந்த 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டிருந்தது.

அப்போது, அரசு விரும்பினால் 435-வது பிரிவின் கீழ் இவர்களை விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து மாநில அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டது. 

ஆனால் மத்திய அரசு அதற்கு உடன்படவில்லை. இதனால் விடுதலையில் முட்டுக் கட்டை ஏற்பட்டது. 2 அரசுகளும் ஒருமித்த கருத்துடன் இருந்திருந்தால் அவர்கள் விடுதலை ஆகி இருப்பார்கள்.

ஆனால் அது நடக்கவில்லை. தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த நல்ல நேரத்தில் அந்த 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க 161-வது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதனை பயன்படுத்தி தமிழக அமைச்சரவையை கூட்டி விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பவேண்டும். இதை செய்வதன் மூலம் 7 பேரும் விடுதலையாக வழி ஏற்படும். 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், திரைப்பட தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.

முதல்-அமைச்சருக்கு அதற்கான நேரம் ஒதுக்கி தருமாறு கடிதம் எழுதப்படும். அவர் ஒதுக்கும் தேதியில் ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தின் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவனமும் ஈர்க்கப்படும்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions