பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ.15 லட்சம் தங்க - வைர நகைகள் கொள்ளை

Bookmark and Share

பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ.15 லட்சம் தங்க - வைர நகைகள் கொள்ளை

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயக நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ(வயது 72). இவர் சென்னை தியாகராயநகரில், போரூர் சோமசுந்தரம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் தனக்கு சொந்தமான நகைகளை தியாகராயநகர், பிரகாசம் தெருவில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்தார். நேற்று பகலில் அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்தார்.

வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டார். பின்னர் வங்கி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி உட்கார்ந்தார். நகைகள் மற்றும் பணத்தை ஒரு பையில் போட்டு, காரின் பின் சீட்டில் வைத்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கார் அருகில் சில 10 ரூபாய் நோட்டுகளை வீசினார். அந்த ரூபாய் நோட்டுகளை, உங்களுடையதா? என்று பாருங்கள் என்று நடிகை ராஜஸ்ரீயிடம் கேட்டார். ரூபாய் நோட்டுகளை பார்த்த ராஜஸ்ரீ, காரை விட்டு கீழே இறங்கினார். அருகில் சிதறி கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை குனிந்து எடுத்தார்.

அந்த நேரத்தை பயன்படுத்தி, ரூபாய் நோட்டுகளை வீசிய மர்ம ஆசாமி, காரில் நகைகள், மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார்.

ரூபாய் நோட்டுகளை பொறுக்கி எடுத்துக்கொண்டு, காரில் ஏறிய நடிகை ராஜஸ்ரீ, பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான், தான் மோசம்போன விஷயம் அவருக்கு தெரியவந்தது.

கொள்ளை போன நகைகளில் தங்க, வைர, வைடூரிய நகைகள் இருந்தன. வைரதோடு, வைர நெக்லஸ், தங்க சங்கிலி, வைர கைக்கெடிகாரம் போன்றவை இருந்ததாக தெரிகிறது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

நடிகை ராஜஸ்ரீ, இதுதொடர்பாக தனது மகனுடன் வந்து, பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாரம்பரியம் மிக்க பழங்கால நகைகள் பறிபோய் விட்டதே, என்று நடிகை ராஜஸ்ரீ கண்கலங்கியபடி போலீசாரிடம் பேசினார்.

பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு அண்மையில் கின்னஸ் சாதனை விருது கிடைத்தது. அதற்காக பழம் பெரும் நடிகர், நடிகைகள் சார்பில் ஒரு விழா நடக்க உள்ளது என்றும், அந்த விழாவில் கலந்து கொள்ளும்போது தான் இந்த நகைகளை அணிந்து செல்ல, வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்ததாகவும், ராஜஸ்ரீ போலீசாரிடம் தெரிவித்தார்.

ராஜஸ்ரீ கொடுத்த புகார் மனு மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சுப்பிரமணி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் குமார், கரியப்பா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள், கொள்ளை நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி ராம்ஜி நகர் கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த நபர், இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொள்ளைச்சம்பவம் நடந்த பிரகாசம் தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை நபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொள்ளைச்சம்பவம் நேற்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிபஜார் பகுதியில் அடிக்கடி இதுபோல் கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. நடிகை சத்தியபிரியாவும் இதுபோன்ற சம்பவத்தில் பணத்தை பறிகொடுத்துள்ளார்.

குற்றப்பிரிவு போலீசில், திறமையான, நேர்மையான போலீசாரை நியமித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions