மரணம் அடைந்த தெலுங்கு பட அதிபர் ராமாநாயுடு உடலுக்கு நடிகர்–நடிகைகள் அஞ்சலி

Bookmark and Share

மரணம் அடைந்த தெலுங்கு பட அதிபர் ராமாநாயுடு உடலுக்கு நடிகர்–நடிகைகள் அஞ்சலி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட 13 படங்களில் 150 படங்களுக்கு மேல் தயாரித்தவர் டி.ராமாநாயுடு. 78 வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டில் மரணம் அடைந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டார்.

சுரேஷ், வெங்கடேஷ் என்ற மகன்களும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் படத்தயாரிப்பாளராகவும், வெங்கடேஷ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் உள்ளார். லட்சுமி நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து பிரிந்து வாழ்கிறார். இவர்களது மகன் நாக சைத்தன்யா தற்போது இளம் நடிகராக சினிமாவில் வலம் வருகிறார்.

இதேபோல் சுரேசின் மகன் ராணாவும் முன்னணி நடிகராக உள்ளார். ஐதராபாத் பிலிம்சிட்டியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த ராமா நாயுடு உடலுக்கு ஏராளமான நடிகர்–நடிகைகள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, நடிகரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி, என்.டி.ராமராவின் மகள் புரந்தேஷ்வரி, நடிகர்கள் நாகார்ஜூனா, ராஜசேகர், பிரகாஷ்ராஜ், தருண், என்.டி.ஆர்.ஹரி கிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர். கல்யாண்ராம், அல்லு அரவிந்த், அல்லு அர்ஜூன், சாய்குமார் ரவிதேஜா, பழம் பெரும் நடிகர் ராஜேந்திர பிரசாத், நடிகைகள் கே.ஆர்.விஜயா, ஜமுனா, சாரதா, வாணிஸ்ரீ, சவுகார் ஜானகி மற்றும் ஏராளமான டைரக்டர்கள், இசை அமைப்பாளர்கள், சினிமா கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஓய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், என்.டி.ஆர். மனைவி லட்சுமி சிவபார்வதி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் ராமாநாயுடு உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஐதராபாத் ஜூப்ளிஹில்சில் உள்ள அவருக்கு சொந்தமான ராமாநாயுடு ஸ்டூடியோவில் வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள். பிற்பகல் 3 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது. ஸ்டூடியோ வளாகத்திலேயே ராமாநாயுடு உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் தெலுங்கு திரை உலகினர் கலந்து கொள்கின்றனர்.

ராமாநாயுடு மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. திரையரங்குகளும் மூடப்பட்டு இருந்தன. ராமா நாயுடு மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions