டிஜிட்டல் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்: சரத்குமார் பேச்சு

Bookmark and Share

டிஜிட்டல் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்: சரத்குமார் பேச்சு

டிஜிட்டல் கட்டண உயர்வை கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசியதாவது:–

தமிழ் திரையுலகம் நிறைய பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருக்கிறது. அந்த பிரச்சினைகளில் கியூப், யூ.எப்.ஓ. டிஜிட்டல் நிறுவனங்களும் பங்கெடுக்க வேண்டும் என்ற கவன ஈர்ப்புக்காகவே இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. முன்பெல்லாம் படங்களுக்கு ரூ.75 ஆயிரம் பிரிண்ட் செலவு ஆனது. டிஜிட்டல் நிறுவனங்கள் ஒவ்வொரு தியேட்டரிலும் புரஜெக்டரை நிறுவி ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிட்டு நிறுவனமே அந்த தொகைக்கு கடனை ஏற்பாடு செய்து கொடுத்தனர். தியேட்டர்களில் திரையிடும் விளம்பர கட்டணத்தில் இருந்தும் பெருந்தொகை எடுத்துக் கொண்டனர்.

2005–ல் இந்த புரஜெக்டரை நிறுவினார்கள். 10 வருடங்கள் ஆகியும் ரூ.5 லட்சம் கடன் தீர்க்கப்படவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. இரு டிஜிட்டல் நிறுவனங்களும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கூறப்பட்டது. இனிமேல் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று நம்புகிறேன். விளம்பர வருமானம் மூலம் ரூ.4 கோடி வரை அந்த நிறுவனங்கள் ஈட்டி உள்ளன என்று கூறப்பட்டது. ஆர்.கே. செல்வமணி ரூ,.560 கோடி என்றார். அதில் தயாரிப்பாளர்களும் உரிய சலுகை கேட்கிறார்கள். அவர்கள்தான் முதலாளிகள். எனவே தயாரிப்பாளர்களுக்கு உரிய மரியாதை வேண்டும் எல்லோருக்கும் வேலை கொடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள்தான். எனவே தயாரிப்பாளர் கோரிக்கைக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் செவிசாய்க்க வேண்டும்.

டி. ராஜேந்தர் பேசும் போது,

‘‘தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். பெரிய படங்களுக்கும் புது படங்களுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணங்களை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

உண்ணாவிரதத்தில் விவேக் பேசியதாவது:–

டிஜிட்டல் நிறுவனங்களால் தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். திரையுலகினர் ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். சரத்குமார் சொன்னால் நடிகர்கள் கேட்க வேண்டும். கலைப்புலி தாணு சொன்னால் தயாரிப்பாளர்கள் கேட்க வேண்டும். உங்களுக்கு சோற்றுக்கு வழி ஏற்படுத்துவதற்கு அவர்கள் போராடுகிறார்கள். புதுப்படம் எடுத்தால் அதை வெளிநாடுகளில் திருடி இணைய தளங்களில் வெளியிடுகிறார்கள். நாமும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களை வைத்து அதை தடுக்க வேண்டும். முன்பெல்லாம் புரஜெக்டர் மூலம் ஒவ்வொரு தியேட்டர்களிலும் பிலிம்சுருள் பெட்டிகளை அனுப்பி படங்கள் திரையிடப்பட்டன. இப்போது அது கியூப், யு.எப்.ஓ. டெக்னாலஜிலாக மாறியுள்ளது. இந்த நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

முக்தா சீனிவாசன் பேசியதாவது:–

தமிழ் திரையுலகம் 10 வருடமாக தேய்ந்து கொண்டு இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்படுகின்றன. விநியோகஸ்தர்கள் இனம் மறைந்து விட்டது. தியேட்டர்காரர்கள் திரையரங்குகளை குத்தகைக்கு விடுகிறார்கள். 40 வருடமாக படங்கள் எடுத்த நான் இப்போது தயாரிப்பை நிறுத்திவிட்டேன். போட்ட பணத்தை திரும்பி எடுக்க முடியவில்லை. நடுத்தர மக்கள் கூட வீட்டிலேயே படங்களை பார்க்கிறார்கள். எனவே அழியும் இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் ஆர்யா பேசும் போது,

‘‘டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர். என் நண்பன் படத்தோடு எனது படத்தின் டிரையலைரை சேர்த்து திரையிடவும் பணம் கேட்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். இந்த நிலைமை அகன்றால் தயாரிப்பு செலவு குறையும்’’ என்றார்.

நடிகர் ஜீவா பேசும் போது,

‘‘தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. ஒரு படத்தை எடுக்கும் போதே நிறைய கஷ்டங்களை சந்திக்கின்றனர். திரையிடும் போது டிஜிட்டல் நிறுவனங்களால் தொல்லைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.’’

டைரக்டர் விக்ரமன் பேசும் போது,

‘‘தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும்’’ என்றார்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions