நடிகர் சங்கத்தின் எதிர்காலம் யார் கையில்?: ஓர் அலசல்!

Bookmark and Share

நடிகர் சங்கத்தின் எதிர்காலம் யார் கையில்?: ஓர் அலசல்!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஒரு வழியாக முடிந்து விட்டது. இனி 2016 பொதுத் தேர்தல் வரைக்கும் மக்கள் மற்றும் மீடியாக்களின் பார்வை திரும்பி இருப்பது தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மீது தான். தி.நகர் அபிபுல்லா ரோட்டில் அமைதியாக செயல்பட்டு வந்த நடிகர் சங்கம்.

இன்று தமிழ்நாட்டின் பரபரப்பு பகுதியாகிவிட்டது. என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோது அமைதியாக இருந்த சங்கம் இன்று ஆர்ப்பரிக்கும் கடலாக மாறியிருப்பது ஏன்? இதற்கான விடையை தேடும் முன் சங்கம் பற்றிய ஒரு சின்ன பிளாஷ் பேக் பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி

கருப்பு வெள்ளை காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய நடிகர்களே சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சந்திப்பது அபூர்வம். அவர்களுக்குள் யார் பெரியவன் என்ற ஈகோ எப்போதுமே இருந்தது. கலைவாணர் என்.எஸ்.எஸ் கிருஷ்ணன் பொதுவுடமை சித்தாந்தவாதி, யூனியன்களில் நம்பிக்கை உள்ளவர். அவரும், சில நண்பர்களும் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

ஒரு சிறிய வாடகை கட்டடத்தில் இது இயங்கியது. 1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் முயற்சியால் தற்போதுள்ள 19 கிரவுண்ட் இடம் சங்கத்திற்கு வாங்கப்பட்டது.

கடனை அடைத்த விஜயகாந்த்

அதன் பிறகு சிவாஜி தலைவராக இருந்தபோது இந்தியன் வங்கியில் கடன் வாங்கி கட்டிடம் கட்டப்பட்டது. வாங்கிய கடன் ஒரு கோடியை கட்ட முடியாமல் அது 3 கோடியா உயர்ந்தது. விஜயகாந்த் தலைவரான பிறகு நட்சத்திர கலை இரவுகள் நடத்தி அந்தக் கடனை அடைத்தார். அதன் பிறகு அவர் அரசியல் கட்சியை தொடங்கியதால் நடிகர் சங்கத்தை கைவிட்டுவிட்டுச் சென்று விட்டார்.

சரத்குமார் ஒப்பந்தம்

அதன் பிறகு தலைவராக வந்த சரத்குமார் தற்போதுள்ள இடத்தில் நவீன கட்டிடம் கட்ட முடிவு செய்தார். தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகிய இருவர் மட்டும் முடிவு செய்து அந்த இடத்தை எஸ்.பி.ஐ சினிமா என்ற நிறுவனத்திற்கு 29 ஆண்டுகள் 11 மாதத்திற்கு லீசுக்கு கொடுத்தனர். இந்த நிறுவனம் 30 ஆண்டுகள் இந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சங்கத்திற்கு 5 ஆயிரம் சதுர அடி இடம் தரவேண்டும். மாதம் 24 லட்சம் தர வேண்டும் என்பதும் ஒப்பந்தம். 30 ஆண்டுகளுக்கு பிறகு இடமும் கட்டிடங்களும் நடிகர் சங்கத்திற்கு வந்துவிடும் தற்போது 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அப்போது ஆயிரம் கோடிகளை தாண்டி நிற்கும். இது ஒப்பந்தம். பின்னர் இந்த ஒப்பந்த்திற்கு பொதுக்கழுவில் அனுமதி பெற்றார்கள்.

குற்றச்சாட்டு

யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தலைவர் மற்றும் செயலாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து தனியாருக்கு இடத்தை தாரை வார்த்துவிட்டார்கள். அவர்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், தியேட்டர் என்று கட்டி முழுமையான வணிகஸ்தலமாக அதனை விற்றுவிடுவார்கள். நடிகர் சங்கத்திற்கென்று இருக்கும் மரியாதை போய்விடும். இந்த ஒப்பந்தம் செய்ததில் பலகோடி முறைகேடு நடந்துள்ளது என்பது விஷால் தரப்பினரின் குற்றச்சாட்டு.

கையேந்தி நிற்க வேண்டுமா?

நடிகர் சங்கத்திற்கு நாமே நம் செலவில் கட்டிடம் கட்டிக் கொள்ளலாம். நடிகர்களை கொண்டு நட்சத்திர இரவு நடத்தி, முக்கிய நடிகர்கள் நடிக்க இரண்ட படம் எடுத்தால் பல கோடி கிடைக்கும் அதை வைத்து நடிகர் சங்கத்திற்கு பிரமாண்ட அலுவலகம், சிறிய மற்றும் நாடக நடிகர்கள் பயன்பெற ஒரு மருத்துவமனை, ஒரு திருமண மண்டபம், ஒரு நாடக அரங்கம், பத்திரிகையாளர்கள், சென்சார் அதிகாரிகள் படம் பார்க்க ஒரு தியேட்டர், நடிப்பு பயிற்சி கல்லூரி.

நடன கல்லூரி, சண்டை பயிற்சி நிலையம், நடிகர்களுக்கான ஜிம், நடிகைகளுக்கான அழகு நிலையம் என முழுக்க முழுக்க நடிகர்களுக்கு தேவையானதை கட்டலாம், அதைவிட்டுவிட்ட மொத்த இடத்தையும் கொடுத்து விட்டு 5 ஆயிரம் சதுரஅடி நிலத்துக்கு கையேந்தி நிற்க வேண்டுமா என்பது அவர்கள் கருத்து.

ராதாரவியின் ஆதிக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அசைக்க முடியாத சக்தியாக ராதாரவி இருந்து வருகிறார். யார் தலைவராக இருந்தாலும் இவர் செயலாளராகவோ வேறு முக்கிய பொறுப்பிலோ இருப்பார். தலைவர்களை உருவாக்கும் கிங் மேக்கர் என்றும் இவரைச் சொல்வார்கள். பல ஆண்டுகள் இவரும் தலைவராக இருந்துள்ளார்.

ராதாரவியின் செல்வாக்கிற்கு காரணம் நாடக நடிகர்கள். 1952ல் நடிகர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது தென்னிந்திய நாடக நடிகர்கள் சங்கம் என்றுதான் அதற்கு பெயர். பெருமளவில் நாடக நடிகர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள் இப்போதும் நடிகர் சங்கத்தில் 60 சதவிகிதம் நாடக நடிகர்கள் தான் உறுப்பினர்கள். 

ராதாரவி திரைப்படங்களில் நடித்தாலும் தன் தந்தையின் ரத்த கண்ணீர் நாடகத்தை ஊர் ஊராக சென்று நடத்துவார். அப்போது அவர் உள்ளூர் நாடக நடிகர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். தனக்கு ஆதரவாக பல புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டார். எப்போது தேர்தல் நடந்தாலும் கணிசமான நாடக நடிகர்களின் வாக்குகளை பெற்று பொறுப்புக்கு வந்துவிடுவார்.

சினிமா நட்சத்திரங்கள் பொறுப்புக்கு வந்தால் நாடக நடிகர்களை மதிக்க மாட்டார்கள் என்கிற எண்ணத்தை அவர்கள் மனதில் ஆழமாக விதைத்து வைத்திருந்தார். இதுதான் அவர் பலம்.

விஷால் அணியின் அதிரடி

ஆனால் இந்த தேர்தலில் அந்த பலத்தை உடைக்கும் காரியத்தை விஷால் அணியினர் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி வருகிறார்கள். இதனால் இந்த முறை நாடக நடிகர்களின் வாக்குகள் ராதாரவி கை நீட்டுகிற பக்கம் விழாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

நாடக நடிகர்களை மரியாதை இல்லாமல் பேசுவது, அவர்களை அடிமைகள் போல நடத்துவது, சினிமா நட்சத்திரங்களையும் தரக்குறைவாக பேசுவது, என ராதாரவியின் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகிறது. இது வருகிற தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள்.

சரத்குமாருக்கு கவுரவ பிரச்னை

சரத்குமார் சங்க பொறுப்பிலிருந்து விலக தயாராகவே இருக்கிறார். அவருக்கு அரசியல் பணிகள் நிறைய இருக்கிறது. ஆனால் விஷால் அணியினரின் தீவிர செயல்பாடுகளால் வருகிற தேர்தல் அவருக்கு கவுர பிரச்னையாகிவிட்டது. அவர் விலகினால்  விஷால் தரப்பினரால் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.

தேர்தலில் தோற்றாலும் இந்த நிலைதான். இந்த தேர்தலில் வெற்றிபெற்றால்தான் அவர் கவுரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும், குற்றச்சாட்டிலிருந்தும் தப்பிக்க முடியும். அதற்கு இப்போது அவருக்கு இருக்கும் ஒரே பலம் அவர்  ஆளும் கட்சியின் ஆதரவை பெற்றவர் என்பதுதான். ஆனாலும் ஆளும்கட்சி அவருக்கு ஆதரவாக இதுவரை கண் அசைக்கவில்லை. நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

ஜெயித்தால் ஹீரோ, தோற்றால் போராளி

விஷாலை பொறுத்தவரை ஜெயித்தால் நிஜ ஹீரோ அந்தஸ்து உயரும். தோற்றால் போராளி பட்டம் கிடைக்கும். எப்படி இருந்தாலும் விஷாலுக்கு லாபமே. ரசிகர் மன்றங்களை தீவிரபடுத்துதல். மக்கள் நல பணியாற்றுதல், திருட்டு விசிடியை களத்தில் இறங்கி தடுத்தல் என விஷாலின் நடவடிக்கைகள் எல்லோரையும் கவனிக்க வைத்திருக்கிறது. 

தற்போது சங்க தேர்தல் நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. எப்போது தேர்தல் நடந்தாலும் சரத்குமார், விஷால் அணி மோத இருக்கிறது. தேர்தலின் முடிவு பல புதிர்களுக்கு விடை அளிக்கும். அது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

அதை தீர்மானிப்பது சரத்குமாரோ, விஷாலோ அல்ல சங்கத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட அதன் உறுப்பினர்கள்தான்.


Post your comment

Related News
சரத்குமார் படத்தில் நடிக்கும் விஷால்!
ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த விஷால்!
பொதுக்குழுவை கூட்டாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? சரத்குமாருக்கு விஷால் கேள்வி
பாண்டவர் அணி மீது கடும் நடவடிக்கை: தேர்தல்அறிக்கையில் சரத் பதிலடி
சரத்குமார் ஒப்பந்தம் நிறைவேறினால் நடிகர் சங்கம் என்ற தடையமே இருக்காது: நாசர் அதிரடி
சரத்குமாருக்கு- 2, நாசருக்கு- 1, ராதாரவிக்கு- 1, விஷாலுக்கு- 3: தேர்தல் சின்னங்கள்!
நடிகர் சங்க தேர்தலால் தயாரிப்பாளர் சங்கத்துக்குள்ளும் ஏற்பட்ட மோதல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: 68 வேட்புமனுக்கள் ஏற்பு!
நடிகர் சங்கச் சிக்கலில் கடைசி நேரத்தில் சமரசம் பேசும் ரோஜா!
தவறான பேசிய விஷால், எஸ்.வி.சேகர் நோட்டீஸ்: சரத்குமார்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions