நாகேஷ் என்கிற சவுக்கு மரம்

Bookmark and Share

நாகேஷ் என்கிற சவுக்கு மரம்

இன்றைய நகைச்சுவை நடிகர்கள் பலர் தலைக்கனம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். முன்னணி நடிகர்கள் நடித்த படத்தின் வெற்றிக்கும் தன்னுடைய காமெடியே காரணம் என்று சொல்கிற காமெடிப்புயல்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட தலைக்கனத்தினால் ஹீரோக்களால் ஓரங்கட்டப்பட்ட காமெடியன்களும் உண்டு. நகைச்சவை நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் சொன்ன விஷயங்களைக் குறிப்பிடலாம்.

நாகேஷ் சொன்னது தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...“நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?“ என்று வானொலி பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நாகேஷ் சொன்ன பதிலைப் படியுங்கள்.....“நான் கவலையேப்படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!  நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்....”


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions