கிஸ் ஆப் லவ் போராட்டம்: நடிகை ஷீலா ஆவேசம்

Bookmark and Share

கிஸ் ஆப் லவ் போராட்டம்: நடிகை ஷீலா ஆவேசம்

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த ஆண்டு அன்பை வெளிப்படுத்தி நட்பில் இணைவது என்ற 'கிஸ் ஆப் லவ்' அமைப்பு உருவாக்கப்பட்டது. பேஸ் புக் மூலம் இதற்கு ஆதரவாளர்கள் பெருகினர்.

அவர்கள் பொது இடத்தில் சந்தித்து அமைப்பினை விரிவுப்படுத்த முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து 'கிஸ் ஆப் லவ்' அமைப்பு பற்றிய தகவல்கள் நாடு முழுவதும் பரவியது.

சென்னையிலும், டெல்லியிலும் இந்த அமைப்பை ஆதரித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் கேரளாவில் மட்டும் இதற்கு ஆதரவு பெருகி வந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட கொச்சியில் 'கிஸ் ஆப் லவ்' அமைப்பினர் ஒன்று கூடி பூங்காவில் முத்தமழை பொழியும் நிகழ்ச்சி நடத்த முயன்றனர். இது பற்றி பல்வேறு ஊடகங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் விவாத மேடைகள் நடத்தி விமர்சித்தன. 

மலையாள தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாதத்தில் பழம்பெரும் மலையாள நடிகை ஷீலா பங்கேற்று இந்த அமைப்பினரை கடுமையாக விமர்சித்தார். அவர்கூறியதாவது:– 

கேரளாவில் 'கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் நடக்கும் செயல்கள் மனதை நெருட வைக்கிறது. கேரள இளம் தலைமுறையின் எண்ணங்கள் குறுகி விட்டதோ? என்று எண்ணத்தோன்றுகிறது.

இருவர் முத்தமிட்டு கொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அது அவரவர் வீடுகளில் உள்ள படுக்கை அறையில் நடக்க வேண்டும். அதனை தெருவுக்கு கொண்டு வருவது அநாகரீகம். 

இப்போது தெருவில் முத்தமிட்டு கொள்பவர்கள் அடுத்து மேலை நாடுகளில் நடப்பதைப்போல தெருவில் நிர்வாணமாக அலைய விரும்புகிறார்களா? என்று தெரியவில்லை. தனியறையில் நடப்பவற்றை அங்குதான் செய்ய வேண்டும்.

அதனை பொது இடத்தில் மேற்கொள்ளகூடாது. அது தான் நமது கலாச்சாரம். ஒருபோதும் அதனை மீறக் கூடாது. மலையாள திரையுலகில் நான் உச்சத்தில் இருந்த போது விபச்சாரி வேடத்தில் 'கபாலிகா' என்ற படத்தில் நடித்தேன்.

அதில் இடம்பெற்ற எந்த காட்சியும் மனதை உறுத்துவதாக இருக்காது. நானும் அத்தகைய வேடங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். 

ஒருமுறை தமிழ் திரையுலகின் முன்னணி நிறுவனத்தினர் என்னை அணுகி அவர்களின் படத்தில் நீச்சல் உடையில் நடிக்கும்படி கேட்டனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன். இது போல தயாரிப்பாளர் ஹரிபோத்தன் என்னை அணுகி 'ரதிநிர்வேதம்' என்ற படத்தில் நடிக்க அழைத்தார்.

அதன் கதை எனக்கு பிடிக்காததால் அதில் நடிக்க மறுத்து விட்டேன். எந்த சூழ்நிலையிலும் நமது நாகரீகத்தை, கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்த செயலிலும் நாம் ஈடுபடக்கூடாது. 
இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions