ரேஷ்மியுடன் காதலா...? பாபி சிம்ஹா சிறப்பு பேட்டி!

Bookmark and Share

ரேஷ்மியுடன் காதலா...? பாபி சிம்ஹா சிறப்பு பேட்டி!

குறும்படங்களில் இருந்து, பெரும் படங்களில் தற்போது பரவலாக பேசப்படும் நடிகர்; ரஜினியின் தீவிர ரசிகர்; தேசிய விருது பெற்ற கலைஞர்; யதார்த்தத்தை மீறாத நடிப்பால், எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த, ஜிகர்தண்டா புகழ், பாபி சிம்ஹாவுடன் ஒரு சந்திப்பு...  

உங்கள் நடிப்பில் விரைவில் வெளிவரக்கூடிய, உறுமீன் படம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?  

உறுமீன் நான், கதாநாயகனாக நடிக்கும், த்ரில்லர், ஆக் ஷன் படம். சமூக பிரச்னைகளை அலசி எடுக்கும் படம். செல்வம், செழியன் என்ற, இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சென்னை, புதுச்சேரி, கேரளா பின்னணியில் கதை நகரும். மனிதர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்னைகளை சொல்லக்கூடிய படம்.

 உங்கள் கதை தேர்வு சிறப்பாக இருக்கிறதே?  

கதை கேட்கும் போதே புதியதா; இல்லை, ஏற்கனவே சொல்லப்பட்ட கதையா என்பது தெரிந்து விடும். நான் தேர்ந்தெடுப்பதை விட, இயக்குனர்கள் கொண்டு வரும் கதையே, வித்தியாசமாக தான் இருக்கிறது. நல்ல நல்ல கதைகள் எனக்கு அமைவது சந்தோஷம்.  புது இயக்குனர் படங்களில் தான், அதிகமாக நடிக்கிறீர்கள்.

இது கொஞ்சம் ஆபத்தானது என, தோன்றவில்லையா?  

முதல் படமான, காதலில் சொதப்புவது எப்படியில் துவங்கி, ஜிகர்தண்டா, நேரம், உறுமீன், கோ 2 என, எல்லா படங்களின் இயக்குனர்களும் புதுமுகங்களே. பத்ரி இயக்கத்தில், ஆடாம ஜெயிச்சோமடா படம் மட்டுமே பழைய இயக்குனர். ஆபத்து என்பதெல்லாம் ஒன்றுமில்லை.

கதையை மட்டும் தான் நம்ப வேண்டும். இயக்குனரிடம்  நடிகனாக நம்மை ஒப்படைத்து விட வேண்டும்; மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வர். நல்ல கதையை தேர்ந்தெடுப்பது மட்டுமே என் வேலை. மற்றவற்றில், மண்டையை உடைத்துக் கொள்வதில்லை.  

ரசிகர்கள் முடிவு எப்படி இருக்குமோ என்ற பதற்றத்தில், நீங்க நடித்த படம் எதுவும் உள்ளதா?  

கோ 2 படம் தான். ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வர் என்று கொஞ்சம் பயமாக உள்ளது. மிக வலுவான கதாபாத்திரம். அரசியல் பின்னணி உடைய, இந்தப் படத்தில் நிருபராக வருகிறேன். என் கதாபாத்திரத்தை சரியா செய்துள்ளேனா என்பதை, நீங்கள் தான் படம் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.  

தேசிய விருது உங்களை எப்படி மாற்றி இருக்கிறது?  

எனக்கு தேசிய விருது கிடைத்துள்ளதாகக் கேட்டவுடன், ஒரு இரும்புக் கம்பியை எடுத்து தலையில் அடித்தது போல் இருந்தது. 10 நிமிடத்திற்குப் பின், படப்பிடிப்புக்கு சென்று விட்டேன்; எதையும் தலைக்கு ஏற்றிக் கொள்ளவில்லை.

அப்போது இருந்து, இப்போது வரை நான் எந்த மாற்றமும் அடையவில்லை; அப்படியே தான் இருக்கிறேன். இப்போதும், யோசிக்கும் விஷயம், நல்ல கதை, நான் அவ்வளவு தான். மற்றபடி, தேசிய விருது கிடைத்தது, வாங்கினேன்; அடுத்து என் வேலையைப் பார்க்க சென்று விட்டேன்.  

எதிலும் திருப்தி இல்லாமல், இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ?  

எதிலுமே எனக்கு முழு திருப்தி இல்லை. எல்லாமே அரைகுறை தான். ஒவ்வொரு நாளும், நான் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொள்கிறேன். நடிப்பாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி, சாகும் வரையில் நான் கற்றுக் கொள்ளவே ஆசைப்படுகிறேன்.  

நீங்க வில்லனா, கதாநாயகனா?  

கதைக்கு என்ன தேவைப்படுகிறதோ அது தான் நான். எதுவாக இருந்தாலும், கவலைப்பட மாட்டேன்; அந்த கதாபாத்திரமாக மாறி விடுவேன்.  

ரஜினிக்கு எவ்வளவு பெரிய ரசிகர் நீங்கள்?  

நான் நடிக்க வரக் காரணமே அவர் தான். அவரின் தீவிர ரசிகன் நான்.

சின்ன வயதில் இருந்து அவரைப் பிடிக்கும்; அவர் படங்களைத் தான் பார்ப்பேன். பாட்ஷா பல முறை பார்த்த படம். 2005க்கு பின், முள்ளும் மலரும். வாரம், ஒரு முறையாவது பார்ப்பேன். அதிகமாக பார்த்த படம் இது தான். 200 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்; அவர் என், ரோல் மாடல்.

ரஜினியின் எந்த படத்தை, ரீமேக் செய்தால், நீங்கள் நடிக்க விரும்புவீர்கள்?

 மூன்று முகம் படம் நடிக்க ஆசை; தலைவர் கலக்கியிருப்பார்.  

சினிமாவில் ரசிகர்கள் உங்களுக்கு கொடுத்த இடம்?

 ரொம்ப பெரிய இடம். எனக்கு பொறுப்புணர்ச்சி அதிகமாகி விட்டது. நல்ல நல்ல படங்களாக என்னிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று, ஒவ்வொரு நிமிடமும், என் மனதுக்குள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. கண்டிப்பாக நல்ல படங்களாகக் கொடுப்பேன்.  இப்ப சினிமாவுக்கு யார் வேண்டுமானாலும் வந்து விடலாமா?  

சினிமாவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அதில் கொஞ்சம் திறமை வேண்டும். சினிமா சும்மா இல்லை; அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்; சினிமாவை முழு மூச்சாக நினைக்க வேண்டும். இப்படி இருந்தாலே போதும். யார் வேண்டுமானாலும் வரலாம்; யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.  

உங்கள் பெயர், மக்களிடம் போய் சேர எத்தனை ஆண்டு போராடி இருப்பீர்கள்?  

கடந்த, 2005ல், சென்னை வந்தேன். நிறைய போராட்டங்களை சந்தித்துள்ளேன். மெல்ல மெல்ல குறும் படங்களில் வந்தேன்; 25 குறும்படங்களில் நடித்திருக்கிறேன். அப்படியே, ஒவ்வொரு படியாக எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்து, சினிமாவில், ஒரு பேர் எனக்கு இப்போது கிடைத்துள்ளது. அதுக்கு பின்னால் பெரிய உழைப்பு உள்ளது.  

உங்களுக்கும், நடிகர் விஜய் சேதுபதிக்கும் தான் இப்போது போட்டியா?  

அப்படி எல்லாம் இல்லை. இப்போதும், மாமா, கதை கேட்டேன். எனக்கு சரியா இருக்குமா என தெரியவில்லை; நீ நடிக்கிறீயா? என, கேட்பார். நான், ஒரு கதை கேட்டேன், நீ கேட்கிறாயா என, நான் கேட்பேன்.

இப்படி, இரண்டு பேர் நட்பும் ஆரோக்கியமாகவே இருக்கிறது. நிறைய குறும்படங்களில், இரண்டு பேரும் ஒன்றாக நடித்துள்ளோம்; நல்ல புரிதல் இருக்கிறது; சமீபத்தில் கூட பேசினோம்.

சூதுகவ்வும் படத்திற்கு பின், நாம் சேர்ந்து நடித்து ரொம்ப நாளாச்சு. ஆண்டுக்கு, ஒரு படமாவது சேர்ந்து செய்ய வேண்டும் என்று பேசினோம். இன்றைக்கும், இறைவி என்று, ஒரு படம். இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறோம். எங்களுக்குள் எந்த போட்டியும், பொறாமையும் இல்லை.  

குறும்பட இயக்குனர் நிறைய பேருடன் உங்களுக்கு நட்பு உள்ளது. அவர்களுக்கு, ஒரு வாய்ப்பு கொடுக்க நீங்க தயாரிப்பாளராவீர்களா?  

ஐயோ... இன்னும் அந்த அளவுக்கு நான் சம்பாதிக்க வில்லை. அப்படி சம்பாதிக்கும்போது, கண்டிப்பா நான் படம் எடுப்பேன்; வாய்ப்பு தருவேன்.  

உங்களுக்குள் ஒரு காதல் வந்துள்ளதே (நடிகை ரேஷ்மி)?  

அப்படி இப்போது எதுவும், ஐடியா இல்லை. இரண்டு பேரும் நல்ல தோழமையுடன் இருக்கிறோம். இப்போது அதைப் பற்றி பேச ஒன்றும் இல்லை.  

உங்களுக்கு அதிகமான தன்னம்பிக்கையை கொடுத்தவர் யார்?

ரஜினி. நான் எப்போதெல்லாம் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வேனோ, அப்போது எல்லாம், முள்ளும் மலரும் படம் பார்ப்பேன். அதில் வரும், ரெண்டு கை, கால் இல்லாட்டியும் எப்படியும் பிழைச்சுக்குவான் சார்; கெட்ட பையன் சார் என்ற வசனம் மட்டும் போதும். அப்படியே மனுஷனை தூக்கி உட்கார வைக்கும். அது போதாதா சொல்லுங்க?


Post your comment

Related News
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions