லிங்கா நஷ்டஈடு பணத்துடன் நான் ஓடிவிட்டதாக அவதூறு: விநியோகஸ்தர் சிங்காரவேலன் அறிக்கை

Bookmark and Share

லிங்கா நஷ்டஈடு பணத்துடன் நான் ஓடிவிட்டதாக அவதூறு: விநியோகஸ்தர் சிங்காரவேலன் அறிக்கை

லிங்கா படவிநியோகஸ்தர் சிங்காரவேலன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

லிங்கா படத்தின் திருநெல்வேலி– கன்னியாகுமரி விநியோக உரிமையை பெற்றிருப்பவர் ரூபன். இவர் ஆளும் கட்சி பிரமுகர். லிங்கா படத்தை திரையரங்குகளில் திரையிட மேலாளராக பணியாற்றியவர் ஐயப்பன்.

இந்நிலையில் லிங்கா விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விநியோகஸ்தர்களுக்கென்று ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதனை பிரித்துக்கொள்ள வருமாறும் வந்த அழைப்பை அடுத்து படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசை சந்தித்தோம்.

அப்போது வேந்தர் மூவீஸ் நிர்வாகிகளும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் யாருக்கு எவ்வளவு தொகை என்று நிர்ணயம் செய்யப்பட்டு, யாருக்கு உடனடி தேவையோ அவர்கள் பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நானும், ரூபனும் எங்களுக்கான தொகையை பெற்று கொடுக்க வேண்டியவர்களுக்கு செட்டில் செய்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் தனக்கு தொகை கிடைக்காததால் ஐயப்பன் தற்கொலைக்கு முயன்றதாக அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்தவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

விஷம் அருந்திவிட்டார் என்று தெரிந்தவுடன் ஆம்புலன்ஸ் அழைப்பதற்கு முன் மீடியாவை அழைத்து சிங்காரவேலனும், ரூபனும் பணத்தை வாங்கிக் கொண்டு ஓடிவிட்டதாக ஐயப்பன் விஷம் அருந்தி விட்டார் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

சிங்காரவேலனுக்கும், திருநெல்வேலி ஏரியாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் படத்தின் தயாரிப்பாளர் வழங்கும் தொகையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் பங்கு கேட்பதை நான் எதிர்ப்பதால் அந்த நிறுவனம் எனக்கு களங்கம் கற்பிக்க முயல்கிறது.

கன்னித்தீவு கதை போல் நடக்கும் இந்த விவகாரத்தை படத் தயாரிப்பாளர்தான் முடித்து வைக்க வேண்டும். இந்த பணம் யாருக்கு சேர வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினால் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டு விடும்.

விநியோகஸ்தர்கள் கூடிப் பேசி முடிவெடுப்பதைவிட தயாரிப்பாளர் முடிவு செய்து நிவாரணம் திரையரங்குகளுக்கா? விநியோகஸ்தர்களுக்கா? இல்லை கார்ப்பரேட் நிறுவனத்துக்கா? என்று தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐயப்பன் நலமுடன் திரும்பி, தன்னை தற்கொலைக்கு தூண்டியது யார் என்பதை விரைவில் அறிவிப்பார்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions