இந்த ஜனநாயக நாட்டில் ‘ஈழம்’ என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியாது! : குமுறிய ராஜ்கிரண்

Bookmark and Share

இந்த ஜனநாயக நாட்டில் ‘ஈழம்’ என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியாது! : குமுறிய ராஜ்கிரண்

‘சிவப்பு’ பத்திரிகையாளர் காட்சிக்கு வந்திருந்தார் நடிகர் ராஜ்கிரண்.

ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை அப்படியே இந்த உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட இந்த நாடு அனுமதிக்காது. ஆனால் எந்த வகையிலாவது அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இந்த சர்வதேச உலகத்துக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஞாபகமூட்டும் படம் தான் இந்த சிவப்பு என்றவர் உணர்ச்சிவசப்பட்டவராய் பேச ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் அதை அடக்க முடியாமல் கண் கலங்கினார்.

உலக நாடுகள்ல எந்த நாட்டுக்கு போனாலும் இலங்கை தமிழர்களை அகதியாக பார்க்காமல் அவர்களையும் அந்த நாட்டு மக்களாக பார்க்கிறார்கள், சுதந்திரமாக வாழ அனுமதிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் அவர்களை அகதிகளாக அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள்.

அதிலும் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் அவர்கள் அனுபவிக்கும் கொடுமை கொஞ்சநஞ்சமில்லை. ஒன்று அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் விட்டு விட வேண்டும். உதவி செய்கிறேன் என்ற பெயரில் அரசியல் செய்யக்கூடாது.

இந்தியா ‘ஜனநாயக நாடு’ என்கிறார்கள். ஆனால் பிரபாகரன் என்ற பெயரையோ, ஈழம் என்ற வார்த்தையையோ உச்சரிக்கக் கூடாது. அந்த வார்த்தைகளை படங்களில் பயன்படுத்தினால் சென்சார் அனுமதிக்காது.

சிங்கள பேரினவாத அரசு பிரபாகரனை கொன்று விட்டது. ஆனால் இன்னும் 25 வருடங்கள் கழித்து கூட இன்னொரு விடுதலைப்புலி அமைப்பு உருவாகிக் கூடாது என்பதற்காக என் தமிழ்ப் பெண்களை சிங்களவனை விட்டு வன்புனர்வு செய்து எல்லோரையும் சிங்களர்களாக மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. கணவனை இழந்த தமிழச்சிகள் பெற்ற குழந்தைகளை காப்பாற்ற அங்கி விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறாள்.

இலங்கை செய்த போர்க்குற்ற விசாரணையை அந்த திருட்டு பசங்களிடமே ( இலங்கை அரசிடம் ) கொடுக்கிறார்கள். அதற்கு இந்தியாவும் ஆதரவளித்து கையெழுத்து போடுகிறது.

இப்போது இந்தியாவில் இந்துத்துவா கொள்கையை பின்பற்றும் மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. மாட்டுக்கறியை சமைத்து சாப்பிட்டான் என்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவனை சுற்றி வளைத்து தாக்கி கொலை செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட மத்திய அரசு  2000க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை திட்டமிட்டு இடித்து தரைமட்டமாக்கிய இலங்கை அரசை கண்டிக்கக் கூட செய்யவில்லை. மாறாக ராஜபக்‌ஷே இந்தியா வந்தால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறது.

இனி இங்கே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான எந்த படத்தையும் இங்கே எடுக்க முடியாது. அதற்கு அந்த உப்புக்குப் பெறாத அரசின் வெளியுறவுக்கொள்கை அனுமதிக்காது. அவர்களின் வேதனையை நேரடியாகச் சொல்ல முடியாது.

அதனால் தான் வேறு வகையில் அவர்களது வேதனையை சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட படம் தான் இந்த ‘சிவப்பு’ என்று அதே உணர்ச்சியுடன் குமுறித் தீர்த்தார் ராஜ்கிரண்.

நாளை மறுநாள் அக்டோபர் 16- தேதி ‘சிவப்பு’ உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இதில் கோனார் என்கிற கேரக்டரிலும், ரூபா மஞ்சரி இலங்கை தமிழ்ப்பெண்ணாகவும் நடித்திருக்கிறார்.

Rajkiran


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions