கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் மலையாளத்தில் வெளியீடு

Bookmark and Share

கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் மலையாளத்தில் வெளியீடு

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள திரூரில் மலையாள இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சிறிது நேரம் மனிதானாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் நூலை மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிட்டார். அவரிடம் இருந்து முதல் பிரதியை கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் பெற்றுக்கொண்டார்.

4 நாட்கள் நடைபெறும் இந்த விழாவைத் தொடங்கி வைத்து கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாற்றுப் புகழ்மிக்க இந்த எழுத்தச்சன் திருவிழாவைத் தொடங்கிவைக்கும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நினைக்கவில்லை. ஆனால், மலையாளப் படைப்பாளிகளின் தீவிரக் காதலன் என்ற தகுதி எனக்கிருக்கிறது. இந்த மலையாள மண்ணைக் கடவுளின் தேசம் என்று உலகம் கொண்டாடுகிறது. ஆனால் கடவுள் தூதர்களின் தேசம் என்று நான் இதைக் கொண்டாடுகிறேன். கவிஞர்களும், எழுத்தாளர்களும் தான் கடவுளின் தூதுவர்கள். இயற்கை மறைப்பதை மனிதனுக்குச் சொல்ல வந்தவர்கள் அவர்களே. மனிதன் மறைப்பதைக் கலையில் சொல்லவந்தவர்களும் அவர்களே.

மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானதென்று சிலவற்றை முன்னிலைப்படுத்துகிறார்கள். தீ, இரும்பு, சக்கரம், நீராவிப்பொறி, மின்சாரம், கணிப்பொறி என்று நீளும் அந்தப் பட்டியல் மிக முக்கியமான ஒன்றை மறந்துவிடுகிறது. அதுதான் மொழி. மனிதக் கண்டுபிடிப்புகளுள் மிக முக்கியமானது மொழிதான்.

ஒரு புதிய கலவையோடு மலையாள மொழியை வளர்த்தெடுத்தவர் எழுத்தச்சன் என்று அறிய முடிகிறது. எழுத்துக்களை ஒழுங்குசெய்த விஞ்ஞானியும் அவர்தான். இலக்கியத்தைச் செழுமைசெய்த கலைஞானியும் அவர்தான். இந்திய இலக்கியத்தின் பன்முகப் பண்பாடு என்ற தலைப்புக்குள் போகும்போது இந்திய மொழிகளின் எண்ணிக்கை என்னைத் திகைக்க வைக்கிறது. ஐரோப்பியக் கண்டத்தைவிடப் பெரியதான இந்தியாவில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டவை மட்டும் 22. இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 1652. இத்தனை மொழிகள் கொண்ட தேசம் ஒரு குடையின்கீழ் இருப்பதுதான் நமது பெருமை.

வேற்றுமை என்பது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. இந்த பூமியும், பிரபஞ்சமும் வேற்றுமைகளால் ஆனது. வேற்றுமைதான் அழகு. வேற்றுமைதான் இயக்கம்; வேற்றுமை தான் சக்தி; வேற்றுமை தான் கலாசாரம். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற வேற்றுமைதான் பூமி. ஆண்-பெண் என்ற வேற்றுமைதான் விருத்தி. பொருள்களின் வேற்றுமைதான் விஞ்ஞானம். ஜனனம் - மரணம் என்ற வேற்றுமைதான் வாழ்வு. இந்த வேற்றுமைகளில் ஒருமை காண்பதுதான் கலை இலக்கியம்.

இலக்கியம் என்பது வாழ்வின் தொடர்ச்சி. அன்று வனாந்தரத்தில் சகுந்தலை வடித்த கண்ணீரைத்தான் அசாம் காட்டில் ஒருத்தி வேறு கண்களால் இன்று அழுதுகொண்டிருக்கிறாள். கவுரவர் சபையில் உரியப்பட்ட திரவுபதி துகில்தான் டெல்லியின் வேறொரு பெண்ணின் தேகத்தில் இருந்து உரியப்படுகிறது. மலையாளக் கடற்கரையில் அலையோடு விம்மிய கருத்தம்மையின் விசும்பல்தான் வங்காள விரிகுடாவில் இன்று வேறொரு பெண்ணின் தொண்டையில் இருந்து வெளிப்படுகிறது. இமயத்தில் வில்பொறித்த சேரன் செங்குட்டுவனின் தீரமும், கடாரத்தை வென்றெடுத்த ராஜராஜனின் வீரமும்தான் இன்று தமிழ் மக்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது.

ஆட்களும் நாட்களுமே மாறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கிறது. தண்ணீரில் விழுந்த நிழல்போல வாழ்வின் நிழல் கலை இலக்கியத்தின் மீது சத்தமில்லாமல் விழுந்துகொண்டிருக்கிறது. இதே மேடையில் என் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வருவதை நான் பெரும் பெருமையாகக் கருதுகிறேன். மொழிபெயர்ப்பை ஒரு கலையாகச் செய்திருக்கும் கே.எஸ்.வெங்கிடாசலத்துக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பெரிதும் நேசிக்கும் எம்.டி.வாசுதேவன் நாயர் அதை வெளியிடுகிறார் என்பது தமிழுக்குக் கிடைத்த மலையாளப் பெருமை.

இந்த நேரத்தில் இந்தியாவின் மத்திய அரசுக்கு ஒரு வார்த்தை. பன்முகப் பண்பாடு என்பது இந்தியாவைக் கண்ணுக்குத் தெரியாமல் கட்டி வைத்திருக்கும் ஒரு தங்கச் சங்கிலி. அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கென்று ஒரு தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதில் இந்தியாவின் சிறந்த படைப்பாளிகளுக்குப் பாரத ரத்னா விருது போல ‘பாஷா ரத்னா’ என்ற விருது வழங்கப்பட வேண்டும். மலையாள மண்ணுக்கு நன்றி என்ற வைரத்தையும் அன்பென்ற முத்தையும் கொண்டு வந்தேன். இரண்டையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 


Post your comment

Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions