கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்

Bookmark and Share

கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்

கஜா புயல் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களை புரட்டி போட்டது. அங்கு நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம். அதனால் அதிக அளவில் நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன.

திரைத்துறையை சேர்ந்த நடிகர்களில் சிலர் நிவாரண நிதி அறிவித்தனர். சில நடிகர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.

கமல்ஹாசன் 2 நாட்கள் பயணமாக தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டார். இரவு பகல் பாராமல் பணியாற்றுபவர்களுக்கு நேரில் சந்தித்து பாராட்டுகள் தெரிவித்தார்.

கஸ்தூரி வாட்டர் பில்டர்களோடு நேற்று இரவு தஞ்சை மாவட்டத்துக்கு சென்றார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தனது குழுவுடன் பார்வையிட்ட ஜி.வி பிரகாஷ், தென்னைப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு அணுகுமாறு இரண்டு எண்களை அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மணலின் தரத்தை ஆய்வு செய்து, குறுகிய காலப் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்த்த பிறகு தான் உண்மையான நிலவரம் தெரிகிறது. பல லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து கிடக்கின்றன.

மின்சாரம் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும். அரசு, சமூக ஆர்வலர்கள் எல்லாரும் வேலை செய்துவருகின்றனர். எவ்வளவு வேலை செய்தாலும் போதாது. நிலைமையை மீண்டும் பழையபடிக்கு கொண்டுவரப் பல மாதங்கள் ஆகும்.

இங்கு லட்சக்கணக்கான தென்னை மரங்களும் தேங்காய்களும் விழுந்து கிடக்கின்றன. இதுதான் நேரம் எனப் பார்த்து, வியாபாரிகள் குறைவான விலைக்குப் பொருள்களை வாங்க முயன்று வருகின்றனர். இது தவறான வி‌ஷயம். வழக்கமான மார்க்கெட் விலைக்கு வியாபாரிகள் வாங்க வேண்டும்.

அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். உலகத்துக்கே சோறு போட்ட இடம் டெல்டா. இந்த மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்த வி‌ஷயம் நல்ல மார்க்கெட் விலையில் வாங்க உதவ வேண்டும்.

இளநீரை மொத்தமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்ய உள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து இளைஞர்களையும் மாணவர்களையும் கவனித்து வருகிறேன்.

தன்னார்வமாகப் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல், மக்களுக்கு நல்லது செய்ய அதிகமாகக் களத்துக்கு வருகிறார்கள். இதுபோன்ற தன்னார்வமுள்ள இளைஞர்கள், மாணவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் விமல் பார்வையிட்டார். அவர் பயின்ற பன்னாங்கொம்பு கிராமத்தில் உள்ள பள்ளியில் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்ததுடன், அங்கு பணியாற்றி வரும் மின் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடும் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில் மீட்புப் பணிகளை விரைந்து செய்ய மற்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

இங்கு எல்லோருமே ஆடு, மாடு, மரங்களை இழந்து நிற்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில், கைவிட்டதுபோல் இருக்கிறார்கள். நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் போன்றோர் தங்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். விஜய்யும் சூர்யாவும் அடிக்கடி தங்களது ரசிக மன்ற நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கள விவரங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

ரஜினி ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தின் போது தூத்துக்குடி சென்றதை போல டெல்டா மாவட்டங்களை பார்வையிட செல்ல இருக்கிறார் என்று நேற்று தகவல் பரவியது. ஆனால் அது உறுதியாகவில்லை. நடிகர்கள் அரசிடம் நிவாரண நிதியை வழங்கியதோடு நில்லாமல் களத்தில் நேரடியாக இறங்கி பணிபுரிவது அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி உள்ளது.


Post your comment

Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
குமரி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ்
போலீஸ், சட்டம் எதற்காக இருக்கிறது? பொங்கிய ஜி.வி.பிரகாஷ்
சிம்புவுடன் துணிந்து மோதும் ஜி.வி.பிரகாஷ்!
தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்!
ஜி.வி-யை கழட்டிவிட்ட விஜய் – அட்லியின் முடிவு என்ன?
சந்தானம் இயக்குனருடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions